என்ன செய்றீங்க பழனிசாமி - டிரெண்டிங்கில் குவியும் கேள்வி

சென்னை : தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசிடம் கேட்டு பெறாமல் அமைதியாக இருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக டுவிட்டரில் ஹேஷ்டாக் ஒன்று டிரெண்ட் ஆனது.

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி.,யில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு பல மாநிலங்களுக்கு நிலுவை வைத்துள்ளது. இதை வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.4 ஆயிரத்து 321 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் ஜிஎஸ்டி சட்டத்தை செயல்படுத்தியதில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நிதியான 47,272 கோடி ரூபாயை மத்திய அரசு வேறு செலவுகளுக்குப் பயன்படுத்திவிட்டது என்று தலைமைக் கணக்கு ஆய்வு அலுவலரின் அறிக்கை கூறியிருப்பதை சுட்டிக்காட்டி திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் ஜிஎஸ்டியால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் அடங்கி அமைதி காத்துக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

இதனால் ஜிஎஸ்டி தொடர்பாக தொடர்ந்து திமுக.,வை சேர்ந்தவர்கள் அதிமுக., அரசை விமர்சித்து வருகின்றனர். ''ஜிஎஸ்டி., நிலுவையை உடனடியாக மத்திய அரசிடம் கேட்டு பெறுங்கள், அமைதியாக இருக்காதீர்கள்'' என்று டுவிட்டரில் இன்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் #குனியாதே EPS_GSTகேள் என்ற பெயரில் ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானபேர் இந்த ஹேஷ்டாக்கில் மீம்ஸ்களும், கருத்துக்களும் பதிவிட்டு உள்ளனர்.

Comments