பாட்னா: லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் உடல், பீஹார் தலைநகர் பாட்னாவில், அரசு மரியாதையுடன், நேற்று தகனம் செய்யப்பட்டது.
லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக பதவி வகித்தவருமான ராம்விலாஸ் பஸ்வான், 74.உடல் நலக்குறைவு காரணமாக, டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த, 8ம்தேதி காலமானார்.
இதையடுத்து, ராம்விலாஸ் பஸ்வான் உடல், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை, ராம்விலாஸ் பஸ்வான் உடல், விமானம் மூலம், பீஹார் தலைநகர் பாட்னாவுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு, திகா படித்துறையில், ராம் விலாஸ் பஸ்வான் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அவரது மகன் சிராக் பஸ்வான், இறுதி சடங்குகள் செய்தார்.பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வரும், பா.ஜ., தலைவருமான, சுஷில் குமார் மோடி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர், இதில் பங்கேற்றனர்.
Comments