8 லட்சம் பூசாரிகள் ஏமாற்றம் : முதல்வர் அறிவிப்பு என்னாச்சு?

கோவை :
'கிராம கோவில் பூசாரிகளுக்கு மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்' என, சட்டசபையில் விதி எண், 110ன் கீழ் முதல்வரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு, ஏழு மாதங்களாகியும் அமல் செய்யப்படாததால், தமிழகம் முழுதும், 8 லட்சம் கிராம கோவில் பூசாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

தமிழகம் முழுதும், 6 லட்சம் கிராம கோவில்கள் உள்ளன. இவற்றில், 8 லட்சம் பேர் பூசாரிகளாக இறைப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லை.கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கை மட்டுமே, இவர்களது வருமானமாக உள்ளது. கொரோனா பரவலுக்குப் பின், அதற்கும் வழியில்லாமல் போய் விட்டது.வறுமையில் வாடும், வயது முதிர்ந்த பூசாரிகள் நலன் கருதி, அவர்களது ஓய்வூதியத்தை மாதம், 3,000 ரூபாயாக அதிகரித்து வழங்குவதாக, சட்டசபையில் முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.மருத்துவம், கல்வி உதவித்தொகை போன்ற அரசின் நல வாரிய சலுகைகள் அனைத்தையும் பெறலாம் எனவும் தெரிவித்தார்.

விதி எண், 110ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு வெளியானதும், கிராம கோவில் பூசாரிகள் அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால், அவர்களது மகிழ்ச்சியை உறுதி செய்ய வேண்டிய மாநில அரசு, ஏழு மாதங்கள் கடந்தும், முதல்வர் அறிவிப்பை செயல்படுத்தாமலும், உரிய ஆணை வெளியிடாமலும் இழுத்தடித்து வருகிறது.

இதனால், நமக்கும் ஓய்வூதியம் கிடைக்கும்; நல வாரிய சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த கிராம கோவில் பூசாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத், அகில உலக முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் கூறியதாவது: கிராம கோவில் பூசாரிகளின் பணியை முறைப்படுத்த, சொந்த நிலமோ, வாடகை வருமானமோ இல்லாத கோவில்களில் பணியாற்றும் பூசாரிகள், போதிய வருமானம் இன்றி, வாழ்க்கை நடத்த முடியாமல் சிரம நிலையில் இருக்கின்றனர். எனவே, அவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியமும், நல வாரிய சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தப்பட்டது.இதை ஏற்ற முதல்வர், ஓய்வூதியத்தை, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக அறிவித்தார். கிடப்பில் இருக்கும் அந்த அறிவிப்பை உடனடியாக அமல் செய்ய வேண்டும்.

மேலும் அரசு அறிவித்துள்ள சலுகைகளை பெறுவதற்கு, ஆண்டு வருமானம், 24 ஆயிரம் ரூபாய்க்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது. இந்த குறைந்த வருமானத்தில், வாழ்க்கை நடத்துவது சாத்தியமற்றது.எனவே, அரசு நல வாரிய உதவிகளை பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பை, 24 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, வேதாந்தம் கூறினார்.கோவில் நிலம் மீட்க

சிறப்பு சட்டம் அவசியம்

ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள், தமிழகம் முழுதும் இருக்கின்றன. அவற்றில் பெரும் பகுதி, உரிய ஆவணங்கள் இன்றியும், ஆக்கிரமிப்பிலும்இருக்கின்றன.இவற்றை முறைப்படி ஆவணப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை. ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவில் நிலங்களை மீட்க, மண்டலத்துக்கு ஒரு டி.ஆர்.ஓ., அந்தஸ்திலான அதிகாரியும், மாவட்டத்துக்கு ஒரு தாசில்தாரும் நியமிக்கப்பட வேண்டும்.

Comments