
ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக பாதிப்பை சந்தித்தது இத்தாலிதான்.. ஆனால் இன்று இத்தாலியை மிஞ்சும் அளவுக்கு ஸ்பெயினில் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது கொரோனாவைரஸ்.
நேற்று ஒரே நாளில் 932 பேர் பலியாகியுள்ளனர். புதிய தொற்று ஏற்படுவதும், மரணங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையிலும் இத்தனை பேர் ஒரே நாளில் இறந்திருப்பது ஸ்பெயின் அரசை அதிர வைத்துள்ளது.
உலக அளவில் இத்தாலிக்கு அடுத்து அதிக பாதிப்பைசந்தித்துள்ள நாடு ஸ்பெயின்தான். இதுவரை இத்தாலியில் 14,681 பேர் உயிரிழந்துள்ளனர்.ஸ்பெயினில் இந்த எண்ணிக்கை 11, 198 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 199 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, புதிய தொற்று ஏற்படுவது சற்று குறைந்துள்ளதாகவும், பலியாவோர் எண்ணிக்கையும் லேசாக குறைய ஆரம்பித்திருப்பதாகவும் அரசுத் தரப்பு புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய தொற்று விகிதம் வியாழக்கிழமை 7.9 சதவீதமாக இருந்தது. இது வெள்ளிக்கிழமை 6.8 சதவீதமாக குறைந்தது. இது கடந்த வார மத்தியில் 20 சதவீதமாக இருந்தது என்பது நினைவிருக்கலாம். அதேபோல தினசரி மரண சதவீதம் வெள்ளிக்கிழமை 9.3 சதவீதமாக குறைந்தது. இது வியாழக்கிழமையன்று 10.5 சதவீதமாக இருந்தது. மார்ச் 25ம் தேதி இது 27 சதவீதமாக இருந்தது.
கடந்த சில நாட்களாகவே ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி காணப்படுகிறது. ஸ்பெயினைப் பொறுத்தவரை அதிக அளவில் வயதானவர்கள்தான் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு போதிய சுவாசக் கருவிகள் கிடைக்காமல் போனதால்தான் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சுவாசக் கருவிகளை முதலில் இளைஞர்கள், நல்ல ஆரோக்கியத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெயினில் இதுவரை உயிரிழந்தோரில் பெரும்பாலானவர்கள் கடந்த 7 நாட்களில்தான் இறந்துள்ளனர் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல்.
Comments