திருவள்ளூரில் வாக்கு சீட்டுகளுக்கு தீ வைப்பு.. மர்ம நபர்கள் அட்டகாசம்.. போலீஸ் தடியடி!

Elections are suspended as mysterious people set fire to ballot papers in Tiruvallur district திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்திலிருந்து வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்து தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடியதால் அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும், வருகின்ற 30 ஆம் தேதி திங்கட்கிழமையும் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பாம்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் வாக்குப்பதிவு மையத்திற்குள் 50 பேர் கொண்ட கும்பல் திடீரென புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், 83 வது வாக்குச்சாவடியில் இருந்த ஓட்டுப்பெட்டியை வெளியில் தூக்கிச்சென்று, வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வாக்குச்சீட்டுகளை எரித்த நபர்களை கைது செய்யக்கோரி, பாம்பரம்பாக்கம் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் கிராம மக்கள் கலைந்து செல்லாததால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பாம்பரம்பாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் வட்டாட்சியர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் வாக்குப்பெட்டியை கைப்பற்றி, வாக்குச் சீட்டுகளை தீ வைத்து கொளுத்திய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments