அதிர்ச்சி கொடுத்த இந்திய ஜிடிபி..! இனி என்ன சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்..?

சந்தை சில தினங்களுக்கு முன்பு தான் பல பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ரேட்டிங் நிறுவனங்கள், இந்தியாவின் இந்த செப்டம்பர் 2019 காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகிதத்துக்கு கீழ் வரும் எனக் கணித்தார்கள். நம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட பாராளுமன்றத்தில் பேசும் போது, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டு இருப்பதாகச் சொல்லி இருந்தார்.

ஆனால் எல்லோருக்கும் ஏமாற்றம் கொடுக்கும் விதத்தில், இன்று மாலை வெளியான ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டுக்கான ஜிடிபி 4.5 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தியப் பொருளாதாரத்தின் மிகக் குறைந்த ஜிடிபி வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இனி என்ன ஆகும்...?

இந்திய பங்குச் சந்தைகளின் முகங்களாக இருக்கும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடந்த சில நாட்களாக புதிய உச்சங்களைத் தொட்டு வந்தன. ஆனால் இன்று ஜிடிபி வெளியாக இருக்கும் செய்தியைக் கேட்டே சென்செக்ஸ் சுமாராக 330 புள்ளிகள் சரிந்து இருக்கின்றன. வரும் திங்கட்கிழமை அன்று சந்தை கொஞ்சம் பெரிய இறக்கத்தை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். எனவே முதலீட்டாளர்கள் உஷாராக இருக்கவும்.

ஏற்கனவே இந்தியாவில் சரிந்து இருக்கும் தேவை மற்றும் நுகர்வு, வேலை இல்லா திண்டாட்டம், உற்பத்தி சரிவு, ஆட்டோமொபைல் துறைகளின் விற்பனை சரிவு, நிறுவனங்களின் வருவாய் சரிவு, டெலிகாம் துறையில் நிலவும் நிலையற்றதன்மை போன்ற பிரச்னைகளால் இந்தியாவின் சர்வதேச மதிப்பீடுகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இதோடு ஜிடிபி வளர்ச்சி சரிவும் சேர்ந்து கொண்டால், இன்னும் கூட சர்வதேச தர மதிப்பீடுகள் குறையலாம்.

நம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போதும் மறக்காமல் இந்தியாவில் வந்து முதலீடு செய்யச் சொல்கிறார். இப்படி ஜிடிபி வளர்ச்சி மண்ணைக் கவ்விக் கொண்டு இருந்தால், சரியாக வியாபாரம் செய்ய முடியவில்லை என்றும் பொருள்படும் இல்லையா..? பின், முதலீட்டாளர்களும் வியாபாரிகளும் எப்படி இந்தியாவில் வந்து முதலீடு செய்வார்கள். இதில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து லாபம் பார்த்துச் செல்லும் FPI முதலீட்டாளர்களும் அடக்கம்.

பொதுவாக ஒரு வியாபாரத்தை புதிதாக தொடங்குவது அல்லது இருக்கும் வியாபாரத்தை விரிவாக்குவது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் வியாபாரம் நன்றாக இருந்தால் தானே நடக்கும்...? இந்தியாவில் ஒட்டு மொத்தமாக வியாபாரம் அத்தனை சிறப்பாக இல்லை என்பதைத் தானே இப்போது இந்த ஜிடிபி தரவுகள் சொல்கின்றன. எனவே இப்போது விரிவாக்கம் செய்ய இருப்பவர்கள் மற்றும் புதிதாக வியாபாரம் தொடங்க இருப்பவர்கள் கூட தங்கள் திட்டத்தை மாற்றிக் கொள்வதற்கு அல்லது ஒத்திப் போடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Comments