
இதற்கு எதிராக உடனடியாக பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் குறுக்கிட்டார். அதில், கோட்ஸே ஒரு தேச பக்திமான். நீங்கள் ஒரு தேச பக்திமானை பற்றி இங்கு எடுத்துக்காட்டு கொடுத்து பேச கூடாது. அது மிகவும் தவறு என்று குறிப்பிட்டார். இதனால் அவையில் பெரிய சர்ச்சை உருவானது.
இந்திய அரசியலில் கடந்த இரண்டு நாட்களாக இது பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் இன்று மக்களவையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பாஜகவிற்கு எதிராகவும், பிரக்யா தாக்கூருக்கு எதிராகவும் கடுமையாக பேசினார்கள். மக்களவை கூட்டத்தொடரில் இருந்து பாஜக பிரக்யா தாக்கூரை நீக்கி இருந்த நிலையிலும் கூட, இன்று அவர் அவையில் கலந்து கொண்டார்.
அவையில் இன்று பிரக்யா தாக்கூர் கோட்சே குறித்த தன்னுடைய கருத்துக்கு விளக்கம் கொடுத்தார். அதில், நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக தவறாக திரிக்கப்பட்டுள்ளது.
இதனால் யாராவது புண்பட்டு இருந்தால், நான் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். ஆனால் என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என்னை எல்லோரும் தீவிரவாதி என்று அழைக்கிறார்கள். ஆனால் எனக்கு எதிராக எந்த விதமான ஆதாரமும் கிடையாது, என்று பிரக்யா குறிப்பிட்டார்.
ஆனால் அவரின் மன்னிப்பை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. பிரக்யாவின் மன்னிப்பை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளி செய்தனர்.பிரக்யாவை அவையை விட்டு வெளியேறும்படி கூறி எதிர்க்கட்சிகள் அமளி செய்தனர்.
Comments