
அமமுக கட்சிக்குள் தற்போது உட்கட்சி பூசல் தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. முக்கியமாக அமமுக கட்சியில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் புகழேந்தி இடையிலான சண்டை தற்போது வலுத்துள்ளது. டிடிவி தினகரன் மீது நாளுக்கு நாள் புகழேந்தி புகார்களை வீசி வருகிறார்.
இவர் அதிமுகவில் சேர போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தியை நீக்கிவிட்டு கர்நாடக மாநிலத்தின் புதிய செயலாளராக சம்பத் அவர்களை டிடிவி தினகரன் நியமனம் செய்தார்.
இந்த நிலையில் அமமுக கட்சியை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் அமமுகவை பதிவு செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவோடு அளிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கையழுத்து போட்டு இருந்தனர்.
இதில் 14 முக்கிய உறுப்பினர்கள் கட்சியை விட்டு சென்றுவிட்டனர். செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உட்பட முக்கிய உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் அவர்கள் அளித்த பிரமாண பத்திரம் செல்லுபடியாகாது. ஆகவே அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். புகழேந்தி தாக்கல் செய்த மனு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
Comments