
இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் பாமகவின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அவர் அறிவித்துள்ளார்.
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர் அங்கு செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளதாகவும், அதிமுக கூட்டணியில் பாமக தொடரும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணியின் இந்த பேட்டி மூலம் அதிமுக முகாம் உற்சாகம் அடைந்துள்ளது. வடதமிழகத்தில் கணிசமான இடங்களை வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் கடந்த சில வாரங்களாக கட்சியினர் மத்தியில் பேசுவதை வைத்து, பாமக கூட்டணியில் இருந்து பிரிந்துவிடுமோ என்ற சந்தேகத்துடன் இருந்தது அதிமுக. ஆனால் அதனை போக்கும் வகையில் அன்புமணி பேட்டி கொடுத்திருப்பது அதிமுக மட்டுமன்றி பாமக நிர்வாகிகளையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்க வேண்டிய ஒன்று என்றும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதே தனது நோக்கமும், விருப்பமும் என அன்புமணி தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Comments