பாஜகவில் இணைந்தார் நமீதா.. ராதாரவியை தொடர்ந்து அதிமுகவுக்கு அடுத்த இழப்பு

Actress Namitha joined BJP சென்னை: நடிகை நமீதா, சென்னையில் இன்று பாஜக தேசிய செயல் தலைவர், ஜே.பி.நட்டா, முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். கவர்ச்சி நடிகையாக, தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நமீதா. இதையடுத்து படிப்படியாக உயர்ந்து கதாநாயகி வேடங்களிலும் அவர் நடிக்க தொடங்கினார். விஜயகாந்துடன், எங்கள் அண்ணா, சத்யராஜுடன் இங்கிலீஷ்காரன், சரத்குமாருடன் சானக்கியா போன்ற திரைப்படங்கள், அவர் ஹீரோயினாக நடித்து பெயர் பெற்றவை.

கடந்த சில வருடங்களாக அதிக அளவில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் நமீதா. இதையடுத்து அவர் அதிமுக கட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். இருப்பினும் கடந்த லோக்சபா தேர்தலில் அவர் எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கியே இருந்தார். இதனால் அவர் அரசியலில் இருக்கிறாரா இல்லையா என்பதே பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இதற்கு நடுவேதான் விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பாளராக கலந்து கொண்டார். எனவே நமீதா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவார் என்று பேசப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இன்று அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு உள்ளார். அந்த கட்சியின் தேசியத் செயல் தலைவர் ஜேபி நட்ட திருவள்ளூரில் நடைபெற்ற கட்சி விழாவில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்திருந்தார். அவர் முன்னிலையில் இன்று மாலை பாஜகவில் நமீதா தன்னை இணைத்துக் கொண்டார். முன்னதாக இன்று காலை, அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த ராதாரவி, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசியதற்காக, திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால், அதிமுகவில் சேர்ந்தவர். பிறகு பாஜகவில் ராதாரவி இணைந்தார்.

Comments