ரத்ததானம் கொடுத்த இளைஞர் கமுதியில் தற்கொலை முயற்சி.. ராமநாதபுரத்தில் பரபரப்பு

Youth who donated his blood with HIV commits suicide attempt கமுதி: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிக்கு ரத்த தானம் செய்ததில் எச்ஐவி நோய் தொற்று இருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ள நிலையில் அந்த ரத்தத்தை தானமாக கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி 2-ஆவது முறையாக கர்ப்பம் தரித்தார். இந்நிலையில் ரத்தசோகை இருந்ததால் இவருக்கு சிவகாசியிலிருந்து தானமாக பெறப்பட்ட ரத்தம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தத்தை தானமாக கொடுத்த அந்த இளைஞர் வெளிநாடு செல்வதற்காக மதுரையில் ரத்தத்தை பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு எச்ஐவி நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிவகாசி மருத்துவமனைக்கு சென்று அந்த ரத்தத்தை யாருக்கும் தானம் செய்து விட வேண்டாம் என இளைஞர் கூறியுள்ளார். ஆனால் அதற்குள் அந்த ரத்தம் சாத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. இதனால் கர்ப்பிணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தத்தை கொடுத்தவர் ராமநாதபுரத்தில் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில் அந்த 19 வயது இளைஞர் கமுதியை சேர்ந்தவர் என்றும் அவர் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தன்னால் ஒரு கர்ப்பிணி பாதிக்கப்பட்டுவிட்டாரே என்று அறிந்த அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments