திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட பெண்கள்: சபரிமலையில் பரபரப்பு

பம்பா : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்ற பெண் பக்தர்கள் 2 பேர் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை திருப்பி அனுப்பக் கோரி ஆண் பக்தர்கள் ஒரு புறமும், திரும்ப செல்ல மறுப்பு தெரிவித்து பெண் பக்தர்கள் ஒரு புறமும், கோயிலுக்கு செல்ல முயலும் 2 பெண்களின் வீடு முன் பா.ஜ.,வினர் ஒரு புறமும் போராட்டம் நடத்தினர். இதனால் சபரிமலையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

சென்னையை சேர்ந்த 11 பெண்கள் நேற்று (டிச.,23) சபரிமலை செல்ல முயன்றனர். அவர்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆண் பக்தர்கள் கோஷம் எழுப்பியதை அடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். 

2 கேரள பெண்கள்:

இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தை சேர்ந்த கனக துர்கா என்ற 2 பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல முயன்றனர். அவர்கள் அப்பாச்சிமேடு மற்றும் மரக்கூட்டம் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

சன்னிதானம் செல்ல ஒரு கி.மீ., தூரம் உள்ள நிலையில், அவர்களை மேலும் முன்னேறி செல்ல அனுமதிக்க மாட்டோம் என ஆண் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கும் வரை திரும்பிச் செல்ல போவதில்லை எனக்கூறி, அப்பெண்களும் நடுவழியில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்பெண்கள் கூறுகையில், தர்சனத்திற்காக நாங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தோம். எங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே வந்துள்ளோம். எவருடைய தூண்டலும் இல்லை. தரிசனத்திற்கு அனுமதிக்கும் வரை திரும்பிச் செல்ல மாட்டோம். அரசு, கூடுதல் போலீஸ் பலத்தை உபயோகித்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர். 

இந்நிலையில், கேரள தேவசம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கோயிலில் தற்போது ஒரு லட்சம் பக்தர்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரச்னை ஏதும் வேண்டாம். 2 பெண்களையும் திருப்பி அனுப்பும்படி போலீசாரை அறிவுறுத்தினார்.

திருப்பி அனுப்பிவைப்பு:

இதற்கிடையில் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயலும் கனக துர்கா மற்றும் பிந்து ஆகியோரின் வீடுகள் முன் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். 
இந்நிலையில், அந்த பெண்களை போலீசார் கட்டாயமாக சபரிமலையில் இருந்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

Comments