அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவி உடல் தகனம்

மும்பை: மஹாராஷ்டிரா மாநில அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி உடல் தகனம் செய்யப்பட்டது.
நடிகை ஸ்ரீதேவி, 54, வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் நடந்த, உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்று இருந்தார். திருமணம் முடிந்ததும், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர், பிப்., 24ம் தேதி இரவு, மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவரது உடல் துபாயில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும், ஓட்டலின் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெரியவந்தது. இதனால் அவரது உடலை, மும்பை எடுத்து வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவி மரணத்தில், பல சந்தேகங்கள் இருப்பதாக, துபாய் அரசு வழக்கறிஞர் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது. 

அஞ்சலி

தொடர்ந்து, அரசு வழக்கறிஞர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஸ்ரீதேவி உடல் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. பின்னர் எம்பாமிங் பணி முடிந்த பின் தனி விமானம் மூலம் இரவில் மும்பை எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, அவரது வீடருகே உள்ள மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாலிவுட் நடிகர் மற்றும் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். ரசிகர்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன்

பின்னர், அவரது உடல், விலே பார்லேயில் உள்ள மின் மயானத்திற்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதனால், சாலையில் நெரிசல் ஏற்பட்டது. அங்கும் பிரபலங்கள் தங்களது இறுதி அஞ்சலி செலுத்தினர். மஹாராஷ்டிரா மாநில அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Comments