சுயநினைவில்லை! மருத்துவமனையில் சேர்த்த போது ஜெ.,க்கு.. விசாரணை கமிஷனில் தீபக் தகவல்

அப்பல்லோ மருத்துவமனை,Apollo Hospital,  அ.தி.மு.க,A.D.M.K,  ஜெயலலிதா,Jayalalithaa,  விசாரணை கமிஷன்,Investigation Commission, தீபக்,Deepak,  ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் , Jayalalitha brother son Deepak,  நீதிபதி ஆறுமுகசாமி,Justice Arumugasamy, போயஸ் கார்டன்,Poyas Gordon,  ஆம்புலன்ஸ், Ambulance, தமிழக அரசு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்,TN Government Health Secretary Radhakrishnan, சசிகலா, Sasikala,'சென்னை, அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது, ஜெயலலிதா சுய நினைவில்லாமல் இருந்தார்' என, விசாரணை கமிஷனில், அவரது அண்ணன் மகன், தீபக் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கையிலும், அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெ., மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. நேற்றைய விசாரணையில், தீபக் ஆஜரானார். அவர், போயஸ் கார்டன் வீட்டில் இருந்து, அப்பல்லோ மருத்துவமனைக்கு, ஜெயலலிதாவை ஆம்புலன்ஸில் கொண்டு வந்தபோது, அவர் சுய நினைவற்ற நிலையில், மயக்கம் அடைந்திருந்தார் என்ற தகவலை, நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட, சிகிச்சை தொடர்பான ஆவணங்களை, நேற்று விசாரணை கமிஷனில் சமர்பித்துள்ளார். அதிலும், 'ஜெ., மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது, சுய நினைவோடு இல்லை' என்ற விபரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதேநேரத்தில், ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட மருத்துவ செய்தியில், ''காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக, மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில், வீடு திரும்புவார்' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

கமிஷன் விசாரணையில், அவர் சுயநினைவு இன்றி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளதால், சுய நினைவை இழக்கும் அளவிற்கு, போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவற்றுக்கு விடை காண, அடுத்த கட்டமாக, முன்னாள் தலைமைச் செயலர்கள் உட்பட, முக்கிய அரசு அதிகாரிகளை அழைத்து விசாரிக்க, கமிஷன் முடிவு செய்துள்ளது.

உண்மை கண்டறியும் சோதனை:

இதற்கிடையில், ''ஜெ., மரணம் தொடர்பாக, சசிகலா உட்பட, 22 பேரை, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்,'' என, ஜெ., அண்ணன் மகள், தீபாவின் கணவர் மாதவன், விசாரணை கமிஷனில் தெரிவித்துள்ளார்.

தீபா, தீபக்கை தொடர்ந்து, மாதவனும் நேற்று ஆஜரானார். அவரிடம், 15 நிமிடங்கள் விசாரணை நடந்தது. அப்போது, புதிதாக, ஒரு பிரமாண பத்திரத்தை அவர் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெ.,க்கு அளிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு, டிச., 5 வரை இருந்ததா; அதற்கு முன்பே விலக்கப்பட்டதா என்பதை, உள்துறை அமைச்சகம் தெரியப்படுத்த வேண்டும். ஜெ., குடும்பத்தை சேர்ந்த என் மனைவியையும், என்னையும், அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அது ஏன் என்பதை, தலைமைச் செயலர் விளக்க வேண்டும்.

ஜெ., இறுதி சடங்கின் போது, ராணுவ மரியாதை அளித்த பின், அவர் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடி, அவரது உதவியாளர், சசிகலாவிடம் வழங்கப்பட்டது. யாருடைய அறிவுறுத்தலின்படி, அவ்வாறு ஒப்படைக்கப்பட்டது. மரபுப்படி என் மனைவி தீபா அல்லது தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது தொடர்பாக, துணை முதல்வர், பன்னீர்செல்வம், முன்னாள் தலைமைச் செயலர், ராமமோகனராவ் ஆகியோரிடம் விசாரிக்க வேண்டும். ஜெ., மறைந்து, ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், அவரது உதவியாளராக இருந்த சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவியை ஏற்றார். அடுத்த ஒரு மாதத்தில், முதல்வராக முயற்சி செய்தது, அவர் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, சசிகலா, அவரது கணவர், நடராஜன், தம்பி திவாகரன், சசிகலா உறவினரான டாக்டர் சிவக்குமார், ஜெ., உதவியாளர், பூங்குன்றன், வீட்டு சமையல்காரர் ராஜம்மாள், உணவு பரிமாறும் பாலாஜி அய்யங்கார், வீட்டு வேலை செய்த செல்வராணி, சசிகலா அண்ணி இளவரசி, அவரது மகன் விவேக், அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டி, டாக்டர் பாலாஜி, திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி மற்றும் அவர் சார்ந்த காவலர்கள் உட்பட, 22 பேரிடம் விசாரிக்க வேண்டும். அவர்களை, உண்மை கண்டறியும் சோதனைக்கு, உட்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை குறித்து, மாதவன் கூறுகையில், ''நீதிபதி, அவரது அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயங்களை மட்டும் விசாரிக்க முடியும் என, தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனைக்கு, ஜெ., கொண்டு செல்லப்படுவதற்கு முன், அங்குள்ள கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டிருந்தால், மிகப்பெரிய சதி நடந்துள்ளதாக அர்த்தம்,'' என்றார்.

ஷீலாவுக்கு 'சம்மன்' :

விசாரணை கமிஷனில் டிச., 19ல் சென்னை மருத்துவக் கல்லுாரி முன்னாள் டீன், டாக்டர் முரளிதரன் ஆஜராகிறார். அதற்கு அடுத்த நாள் முன்னாள் தலைமை செயலரும், முன்னாள் அரசு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன், வழக்கறிஞர், ஜோசப் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டிச., 21ல், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் ஆஜராக உள்ளார்.

Comments