கவுகாத்தி : ஜிஎஸ்டி கவுன்சிலின் 23 வது ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 178பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், அன்றாடம் பயன்படுத்தக் கூடிய 200 க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 28 சதவீதம் ஜிஎஸ்டி கொண்ட பொருட்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. ஷாம்பூ, பிராஸ்டிக் பொருட்கள், சுகாதார பொருட்கள், சூட்கேஸ், காகிதம், எழுது பொருட்கள், வாட்ச்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவைகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஏசி ரெஸ்டாரன்ட்களில் வழங்கப்படும் உணவுகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சாக்லேட்கள், சூயிங் கம், ஷாம்பூ, சோப்பு, ஷூ பாலிஷ், ட்யோடரென்ட், சத்துள்ள பானங்கள், மார்பிள், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான அழகு சாதன மூலப் பொருட்கள், ஷேவிங் மற்றும் ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், சலவை பவுடர்கள், கிரானைட் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீதம் ஜிஎஸ்டி பிரிவின் கீழ் உள்ளன.
இருப்பினும் பெயிண்ட்கள், சிமெண்ட் ஆகியவை 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழே வைக்கப்பட்டுள்ளன. வாஷிங் மேஷின், ஏசி போன்ற சொகுசு பொருட்களும் 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழே வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
நவ.,15ம் தேதி முதல் அமல்
பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அமைச்சர் அரண் ஜெட்லி கூறினார். மேலும் அனைத்து வகையான உணவகங்களுக்கான ஜி.எஸ்.டிவரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 7 ஆயிரத்து 500 வரை வாடகை வசூலிக்கும் ஓட்டல்களுக்கு 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
13 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த18 சதவீத வரி 12 சதவீதமாகவும், 6 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத வரி 5 சதவீதமாகவும்,8 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 15 சதவீத வரி 5 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. மேலும் 6 பொருட்கள் மீதான 5 சதவீத வரி ரத்து செய்யப்படுவதாகவும், கணக்கு தாக்கல் தொடர்பாக நாள் ஒன்றிற்கு விதிக்கப்படும் அபராத தொகை ரூ. 200-ல் இருந்து ரூ.20 ஆக குறைக்கப்படுகிறது என அமைச்சர் கூறினார்.
Comments