காங்., தலைவரின் உதவியாளர்
அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை சின்னத்தை பெற்று தர, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், ஏப்., 25ம் தேதி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரை டில்லி போலீசார் கைது செய்தனர். கர்நாடகா காங்., தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான பரமேஸ்வராவின் உதவியாளர் வி.சி.பிரகாஷ் என்பவரிடம் மல்லிகார்ஜுனா போன் மூலம் பேசியது, டில்லி போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. எனவே, பிரகாஷிடம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 164வது பிரிவின் கீழ், டில்லி போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பிரகாஷ் கூறிவிட்டார். எனினும், போகிற போக்கில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் பெற்று தர சசிகலா மற்றும் தினகரன் தரப்பினர் மூலம், சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டது என்று பிரகாஷ் தெரிவித்தார். இந்த வகையில், பெங்களூரு சிறை விவகாரம் டில்லி போலீசாருக்கு ஏற்கனவே தெரியும் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Comments