மனநலம் பாதிப்பு
ராஜஸ்தானை சேர்ந்த பத்ரிலால், ரயில்வே ஊழியர். மன நிலை பாதிக்கப்பட்ட அவர், ஏராளமான குண்டூசிகளை முழுங்கி விட்டார். இதனால் கடந்த நான்கு மாதங்களாக அவரால் எதையும் முழுங்க முடியவில்லை. உணவு சாப்பிட மிகவும் சிரமப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க ராஜஸ்தானில் உள்ள மருத்துவமனைகள் முன் வரவில்லை. இதையடுத்து டில்லியில் உள்ள ஆந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள் அவரை சி.டி.ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது உடலின் உள்ளே பல்வேறு இடங்களில், 150 குண்டூசிகள் இருந்தது தெரிய வந்தது. குறிப்பாக, கழுத்து பகுதியில் மட்டும், 90 குண்டூசிகள் இருந்தன. காது, மூக்கு தொண்டை பிரிவு இயக்குனர் டாக்டர் லலித் மோகன் பராசர் தலைமையில் அவருக்கு, 6 மணி நேர அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கழுத்து பகுதி வழியாக தான் மூளைக்கு ரத்தம் மற்றும் பிராண வாயு கொண்டு செல்லப்படுகின்றன. சிறிய தவறு நிகழ்ந்தால் கூட அவர் கோமாவில் விழுந்து விடும் அபாயம் இருந்தது. இருப்பினும் மிகவும் சிரமப்பட்டு அவரது கழுத்து பகுதியில் இருந்த, 90 குண்டூசிகள் அகற்றப்பட்டன.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பத்ரிலால் நலமாக இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அவர் சில நாட்களுக்கு திரவ உணவு உட்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments