பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்த்துடன், இந்த வரி முறையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோரின் எதிர்ப்புகளை மீறி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த புதிய வரலாற்றை படைத்துள்ளது.
நாடு முழுதும் நடைமுறையில் இருந்த பலமுனை வரி விதிப்பு முறைக்கு மாற்றாக, ஒரே சீரான, ஒற்றை வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை கொண்டு வருவதற்காக, கடந்த, 17 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பல்வேறு சோதனைகள், தடைகள், எதிர்ப்பு களை மீறி, இந்த வரலாற்று சிறப்புமிக்க வரி விதிப்பு முறை, ஜூலை, 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முக்கியத்துவம்
பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பிறகு, மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த வரி முறையை, மிக சிறப்பான முறையில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்காக அறிமுக விழா, பார்லிமென்ட் மைய மண்டபத்தில், நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வாழ்த்துகளுடன், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்ற விழாவில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, ஜி.எஸ்.டி., வரி முறையை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலமானவர்கள் பங்கேற்ற விழாவில், அவர்களின் பலத்த கரகோஷங்களுக்கு இடையே, 'ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை' என்று அழைக்கப்படும் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டது. அதையடுத்து, இந்த வரி விதிப்பு முறை, நாடு முழுதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
எதிர்ப்புகள்
இந்த வரி விதிப்பு முறையை அமல்படுத்து வதற்காக, பார்லிமென்டில் மசோதாக்கள் தாக்கல் செய்தபோது, அனைத்து கட்சிகளும் முழு ஆதரவு அளித்தன. மேலும், வரி விகிதங்களை இறுதி செய்வதற்கான, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமை யிலான ஜி.எஸ்.டி., கவுன்சிலில், அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஒருமித்த கருத்துகளுடன், வரி விகிதங்கள் இறுதி செய்யப்பட்டன.
ஆனால், ஜி.எஸ்.டி.,அறிமுக விழாவில் பங்கேற்பதை புறக்கணிப்பதாக, காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. மேலும், வரி விதிப்பு முறைக்கு எதிராக பல் வேறு கருத்துக்களை வெளியிட்டன. எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புகளை புறந்தள்ளி, நாட்டின் வரலாற்றில் இடம்பெறும் இந்த வரி விதிப்பு முறை, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய வரலாறு
பார்லிமென்ட் மைய மண்டபத்தில், இதுவரை இரண்டு முறை மட்டுமே நள்ளிரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. நாட்டின் சுதந்திரத்தை அறிவிக்கும் வகையில், 1947, ஆக., 14 நள்ளிரவில், நாட்டின் முதல் பிரதமர் நேரு உரையாற்றினார்.
அதன்பிறகு, 1997ல், நாட்டின் சுதந்திர பொன்விழாவை கொண்டாடும் வகையில், நள்ளிரவில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு, பார்லிமென்ட் மைய மண்டபத்தில், வரலாற்று சிறப்புமிக்க, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அறிமுக நிகழ்ச்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குவிந்த பிரபலங்கள்:
நேற்று நள்ளிரவு நடந்த, பலமுனை வரி விதிப்பு முறையில் இருந்து விடுதலை அளிக்கும், ஜி.எஸ்.டி., வரி அறிமுக விழாவில், நாட்டின் பலதுறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பார்லிமென்டின், லோக்சபா , மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்களுடன்லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரபல திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்.பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள்,தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் அப்துல் ரஹீம் ராதர், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் முன்னாள் தலைவர் சுஷில்குமார் மோடி, ஜி.எஸ்.டி., வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்த, மேற்கு வங்க முன்னாள் நிதியமைச்சர் அசிம் தாஸ் குப்தா, கேரள முன்னாள் நிதியமைச்சர் கே.எம்.மாணி பங்கேற்றனர்.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், முன்னாள் கவர்னர்கள் பிமல் ஜலான், ஒய்.வி.ரெட்டி, டி.சுப்பா ராவ், சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கையாளர் ஷஷிகாந்த் சர்மா, முன்னாள் தணிக்கையாளர்கள் வினோத் ராய், டி.என்.சதுர்வேதி, தலைமை தேர்தல் கமிஷனர் நஜிம் ஜைதி, தேர்தல் கமிஷனர்கள் அசால்குமார் ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பிரபல சட்ட நிபுணர்கள் சோலி சொராப்ஜி, கே.கே.வேணுகோபால், ஹரீஷ் சால்வே, தொழில் துறை அமைப்புகளான பிக்கியின் தலைவர் பங்கஜ் படேல், சி.ஐ.ஐ., தலைவர் ஷோபனா காமனேனி, அசோசெம் தலைவர் சுனில் கனோரியா ஆகியோரும் பங்கேற்றனர். 'நிடி ஆயோக்' தலைவர் அரவிந்த் பனாகரியா, டில்லி மெட்ரோ ரயில் முன்னாள் தலைவர் ஸ்ரீதரன், பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், பிரபல ஆடிட்டர்கள், தொழில திபர் ரத்தன் டாடா உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
வணிக நிறுவனங்களில் கூட்டம்
ஜி.எஸ்.டி., அமலாவதை முன்னிட்டு, வணிக நிறுவனங்கள் அறிவித்த தள்ளு படி விற்பனை, நேற்று, நிறைவடைந்ததால், வீட்டு உபயோக பொருள் விற்பனையகங்களில், கூட்டம் அலைமோதியது.
நாடு முழுதும், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதில், பல பொருட்களுக்கு விலை குறைப்பு இருந்தாலும், பிரிஜ், 'ஏசி', வாஷிங் மிஷின், பேன், 'டிவி' போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கு வரி அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
தங்களிடம் உள்ள பொருட்களை வேகமாக விற்பதற்காக, மக்களை கவரும் வகையில், 20 முதல், 30 சதவீதம் வரை விலை தள்ளுபடியை, வீட்டு உபயோக பொருள் நிறுவனங்கள் அறிவித்தன.
அதனால், கடந்த சில நாட்களாக, இவற்றின் விற்பனை அதிகரித்தது. இந்நிலையில் கடைசி நாளான நேற்று, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளில், கூட்டம் மேலும் பல மடங்கு உயர்ந்தது.பல நிறுவனங்கள், போட்டி போட்டு, விலையை மேலும் குறைத்தன. இதுபோல், வாகன விற்பனை கடைகள், நகைக் கடைகளிலும், கூட்டம், வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
Comments