பிரதமரை சந்தித்தது ஏன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்

புதுடில்லி: பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. தமிழகத்தின் திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்ததாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

டில்லியில் பிரதமர் மோடியை, முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார். இதன் பிறகு முதல்வர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தர நிதி ஒதுக்க வேண்டும் . நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம். காவிரி நதிநீர் முறைபடுத்தும் குழு அமைக்க வேண்டும். பம்பா, அச்சன்கோயில் ஆற்றின் உபரி நீரை தமிழகத்திற்கு தர வேண்டும். மின்சாரம் தயாரிக்க வேண்டும் என கேரளாவை மத்திய அரசுஅறிவுறுத்த வேண்டும் குடிமராமத்து பணிகளுக்காக ரூ.500 கோடி மானியமாக வழங்க வேண்டும். இலங்கை வசமுள்ள படகுகள், மீனவர்களை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்றியதற்காக வழங்க வேண்டி நிலுவை தொகை ரூ.17 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளேன். சட்டசபையில் வைக்கப்பட உள்ள ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வேண்டும் எனவும், டிசம்பர் மாதம் நடைபெறும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். பிரதமரை அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. அரசு ரீதியாக தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments