எம்.ஜி.ஆர். அதிமுகவை உருவாக்கும் போது கட்சி விதிகளில் அதிக கவனம் செலுத்தினார். இதற்கு காரணமே, திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி அக்கட்சிக்காக உழைத்த தம்மை எளிதாக கட்சியைவிட்டே நீக்கிவிட்டனர் என்ற ஆதங்கம்தான்.
அதனால்தான் எந்த ஒரு கட்சியிலும் இல்லாத வகையில் அதிமுகவில் பொதுச்செயலர் பதவியை தேர்தல் மூலம் நடத்தும் வகையில் உருவாக்கினார். அதுவும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்துதான் பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது கட்சி விதி.
தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர்
தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் அந்தமான் தீவுகள் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என திட்டவட்டமாக கூறுகிறது கட்சி விதி. இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பொதுச்செயலாளர்தான் துணைப் பொதுச்செயலர், பொருளாளர் மற்றும் தலைமை நிலைய செயலர்களை நியமிக்க முடியும் என்கிறது விதி.
கையெழுத்திட முடியாது
சசிகலாவைப் பொறுத்தவரையில் இடைக்கால பொதுச்செயலாளராக மட்டுமே நியமிக்கப்பட்டவர். அதிமுக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் அல்ல. ஆகையால் அவரால் ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை வழங்கும் பார்மில் கையெழுத்திடவும் முடியாது என்கிறது ஓபிஎஸ் அணி.
மதுசூதனன், ஓபிஎஸ்
அதேபோல பொதுச்செயலாளராக ஒருவர் இல்லாத நிலையில் என்ன செய்வது என்பதையும் அதிமுக கட்சி விதி விவரிக்கிறது. பொதுச்செயலாளர் பதவி காலியாகும் நிலையில், முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், அடுத்த பொதுச்செயலாளரை "தேர்வு" செய்யும் வரை கட்சியை நடத்தலாம் என்கிறது. அதாவது ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்தான் கட்சியை வழிநடத்த முடியும் என்கிறது அதிமுக விதி. இதன்படி ஆர்.கே.நகரில் போட்டியிடும் மதுசூதனன்தான் உண்மையான அதிமுக வேட்பாளர் என்றாகிறது. இதையும் தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக்காட்டி இரட்டை இலை சின்னத்தை கோரியுள்ளது ஓபிஎஸ் அணி.
பம்மும் சசிகலா கோஷ்டி
அதிமுக விதிகள் அனைத்துமே சசிகலா, தினகரன் கோஷ்டிக்கு எதிராக இருக்கிறது. அதனால்தான் இந்த அணியினர், நாங்கள் தேர்தல் நடத்தி பொதுச்செயலாளரை தேர்வு செய்கிறோம். கால அவகாசம் கொடுங்கள் எனக் கேட்கிறது. இப்படி கேட்பதன் மூலமே சசிகலா நியமனத்தை அந்த அணியே கேள்விக்குள்ளாக்குகிறது என்பதையும் ஓபிஎஸ் அணி சுட்டிக்காட்டுகிறது.
வெல்வது யார்?
சசிகலா கோஷ்டி களமிறக்கிய லாபிகளுக்கான ஸ்லீப்பர் செல்கள் செல்வாக்கை செலுத்தாமல் இருந்தால் நிச்சயம் ஓபிஎஸ் அணிக்கே அதிமுக போகும். லாபியிஸ்டுகளின் முயற்சிகள் கைகொடுத்தால் அதிமுக அதிகாரப்பூர்வமாக சிதறுவதை தவிர்க்க முடியாது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
Comments