இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

தினமலர் செய்தி : பெய்ஜிங்: புத்த மத தலைவர் தலாய் லாமா அருணாச்சல் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இதனால் இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

தலாய் லாமா பயணம்:

அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், புத்த மத தலைவர் தலாய் லாமா, மாநில அரசின் அழைப்பை ஏற்று அருணாச்சல் பிரதேசம் செல்ல உள்ளார். அவரது பயணம் எப்போது என முடிவாகவில்லை. இந்த வருடத்தில் அவர் அருணாச்சல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவலை:

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தலாய் லாமாவின் அருணாச்சல பயணம் மேற்கொள்வது சீனாவுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் சீனாவின் நிலை தெளிவாக உள்ளது. தலாய் லாமாவின் நிலை, சீனாவுக்கு எதிராக உள்ளது. இதனால், அவர் அங்கு செல்வது சரியாக இருக்காது. எங்களின் கவலையை இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். 

தலாய் லாமா விவகாரம், இந்திய - சீன எல்லையில் உள்ள நிலை குறித்து இந்தியாவுக்கு நன்கு தெரியும். இந்த சூழ்நிலையில், தலாய் லாமாவை அருணாச்சல பிரதேசம் செல்ல இந்தியா அனுமதித்தால், அது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments