ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை முடக்கப்படும்

இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என, ஓ.பி.எஸ்., மற்றும் சசி கோஷ்டியினர், தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளனர். இருதரப்பிலும், ஏராளமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், முடிவு எடுக்க முடியாமல், ஆணையம் தவிக்கிறது. இதனால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், இரட்டை இலை சின்னம் முடக்கப் படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், சசிகலா, ஓ.பி.எஸ்., தலைமையில், இரு அணிகளாக, அ.தி.மு.க., பிரிந்தது. இரு அணியினருமே, கட்சிக்கு உரிமை கொண்டாடி, டில்லியில் உள்ள, தலைமை தேர்தல் ஆணையத்தில் முறை யிட்டு உள்ளனர். இருதரப்பினருமே, இது சம்பந்தமாக, கட்டு கட்டாக ஆவணங்களை, ஆணையத்தில், தொடர்ந்து தாக்கல் செய்து வருகின்றனர்.

'எம்.எல்.ஏ.,க்கள் அவர்கள் பக்கம் இருந்தாலும், கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பது, எங்கள் ஆட்கள் தான்' என, ஓ.பி.எஸ்., அணி தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக, சம்பந்தப்பட்ட பதவிகளில் இருப்பவர்கள் கையெழுத்திட்ட அபிடவிட் களை, ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஆஜராக உத்தரவு: ஓ.பி.எஸ்., தரப்பில் தரப்பட்டுள்ள ஆவணங் களுக்கு, சசி தரப்பில் பதில் தருவதோடு, அதற்குரிய ஆவணங்களையும், அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இருதரப்பு ஆவணங் களையும் பரிசீலித்து, ஆணையம் முடிவெடுக்க வேண்டும். இதற்காக, வரும், 22ல், இருதரப்பை யும், தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆஜராகும்படிஉத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், வரும், 23ம் தேதி, மனு தாக்கல் செய்ய கடைசி நாள். அதற்குள், இரட்டை இலை சின்னம் யாருக்கு என, ஆணையம் முடிவெடுத்தாக வேண்டும். எனவே, 22ம் தேதி ஒரு நாள் விசாரணையில், சின்னம் யாருக்கு என்ற முடிவை, ஆணையம் எடுத்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை, ஆணையம் இறுதி முடிவு எடுக்காவிட்டால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, ஆணைய அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

சமாஜ்வாதி சின்னம் தொடர்பாக, அப்பா முலாயம் சிங் - மகன் அகிலேஷ் இடையே பிரச்னை ஏற்பட்ட போது, அகிலேஷ் நிறைய ஆதாரங்களைச் சமர்ப்பித் தார். ஆனால், முலாயம் எதையும் கொடுக்க வில்லை.எனவே, நாங்கள் உடனடியாக முடிவெடுத்து, சைக்கிள் சின்னத்தைஅகிலேஷுக்கு ஒதுக்கி உத்தரவிட்டோம். ஆனால், அ.தி.மு.க., விவகாரத்தில், இரண்டு பக்கமும் ஆவணங்கள் தந்துள்ளதால், உடனடியாக முடிவெடுப்பது கடினம். 

எனவே, இறுதி முடிவெடுக்கும் வரை, சின்னத்தை தற்காலிகமாக முடக்குவது தான் ஒரே வழி.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பா.ஜ., தலையீடு: அ.தி.மு.க., விவகாரத்தில், பா.ஜ., தலைமை அதிக கவனம் செலுத்துகிறது. ஓ.பி.எஸ்., மீது, ஏற்கனவே மோடிக்கு பரிவு அதிகம். அதனால், சசி அணிக்கு இரட்டை இலை கிடைக்கக் கூடாது என்பதில், பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. 

சசி தரப்பிற்கு, தேர்தல் ஆணையத்தில், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆஜராகி வாதாட உள்ளார். காங்., ஆட்சியில், இவர் அரசு வழக்கறிஞராக பணியாற்றினாலும், மோடி, அமித் ஷா மற்றும் அருண் ஜெட்லிக்கு மிகவும் நெருக்கமானவர்.

அமித் ஷா சொல்லியே, சசி தரப்புக்கு மோகன் ஆஜராவதாக கூறப்படுகிறது. இதில் ஏதாவது, 'உள் குத்து' இருக்கிறதா எனவும் சிலர் சந்தேகப்படுகின்றனர். முலாயம் சிங் -- அகிலேஷ் தேர்தல் சின்னம் விவகாரத்தில், ஆணையத்தில், முலாயமிற்கு ஆஜராகிய வரும் இதே மோகன் தான். கடைசியில், முலாயம் சிங்கிற்கு எதிராக தீர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.

Comments