ஆர்.கே.நகரில் சசிகலா எதிர்ப்பு: வேட்பாளர் தினகரன் கலக்கம்

தினமலர் செய்தி : சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முழுக்க முழுக்க சசிகலாவை எதிர்க்கும் ஒரு தேர்தல் ஆகி இருப்பதாக, சசிகலா தரப்பு அ.தி.மு.க.,வினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா தரப்பு அ.தி.மு.க., சார்பில், கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் வேட்பாளராக இறக்கப்பட்டதும், எதிர் தரப்பில், அதாவது, பன்னீர்செல்வம் தரப்பு அ.தி.மு.க.,வில் அவைத் தலைவர் மதுசூதனன் வேட்பாளர் ஆகி இருக்கிறார்.

இவர்கள் தவிர, தி.மு.க., தரப்பில் மருது கணேஷும், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை சார்பில் தீபாவும் போட்டியிடுகின்றனர். தே.மு.தி.க.,வும், பா.ஜ.,வும் கூட போட்டியிடுகின்றன.

சசிகலா எதிர்ப்பு:

இந்தத் தேர்தலில், எல்லா கட்சிகளும், ஒட்டுமொத்தமாக சசிகலா எதிர்ப்பை பிரதானமாக்கி பிரசாரத்தை துவக்கி உள்ளதால், சசிகலா எதிர்ப்பு மனநிலைக்கு வரும் பொதுமக்கள் யாருக்கு ஓட்டளிப்பது என்ற குழப்பத்திற்கு வரக்கூடிய சூழல் உருவாகும். அப்போது, சசிகலா தரப்பு வேட்பாளர் தினகரனை வீழ்த்த, தங்களுக்குள் சசிகலாவை எதிர்த்தும் வேட்பாளர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும், தங்களுக்குள் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதனால், கடைசி நேரத்தில், தே.மு.தி.க., தீபா பேரவை, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், தினகரனை வீழ்த்துவதற்காக, மதுசூதனனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்க ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவல் அறிந்து, தினகரன் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சசிகலா படம் வேண்டாம்:

சசிகலா எதிர்ப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள தினகரன், தேர்தல் பிரசார போஸ்டர்கள், பிளக்ஸ்களில் சசிகலா படத்தை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments