திமுக இணையதள அணி வேண்டுமா? வேண்டாமா? - சமூக வலைதளங்களில் திமுகவினரிடையே கருத்து மோதல்

இன்றைய கால கட்டத்தில் ஒருவரின் முகவரி என்பது அவரின் முகநூல் அல்லது  ட்விட்டர் முகவரியையே பிரதானமாக கருதும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் இன்று மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்ததாக மாறி இருக்கிறது.

இத்தகைய சமூக வலைத்தளங்கள் முதலில் தனி மனிதனின் நட்பு பரிமாறும் இடமாக இருந்தது. காலத்தின் கட்டாயம் இன்று அது அரசியல் கட்சிகளின் களமாக மாறி வருகிறது. அகில இந்திய அளவில் இருக்கும் தேசிய கட்சிகள், கட்சி தலைவர்கள் தங்களின் கருத்தை இத்தகைய இணைய சமூக தளங்களில் அதிகம் பகிர்கிறார்கள். அந்த வகையில் தமிழக அரசியல் கட்சிகளும் அவர்களின் தலைவர்களும் தங்களின் பங்களிப்பை இந்த தளங்களில் கொடுத்து வருகிறார்கள். தமிழக அரசியல் தலைவர்களில் திரு.ஸ்டாலின் அவர்களுக்கே அதிக எண்ணிக்கையில் பின் தொடர்வோர் (Followers) இருப்பது கூடுதல் தகவல்.


இதில் அதிமுக ஒரு படி முன்னே போய் தனது கட்சிக்கு தலைவர், செயலாளர் என்று கட்சிக்குள் இருக்கும் பதவியை போல இணையதள அணிக்கும் (ADMK IT Wing) பல மட்டங்களின் அதிகார மையங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், அதிமுகவில் எந்த ஒரு தலைவருக்கும் இந்த வலைதளங்களில் கணக்கோ இல்லை. அப்படியே இருந்தாலும் செயலில் இல்லாத வகையிலான கணக்கு தான் இருக்கிறது. இருந்தாலும் அதிமுக இணையதள அணி தன் பங்களிப்பை மிக சிறப்பாக செய்தி வருகிறது.

ஆனால், பிரதான எதிர்கட்சியான திமுகவில் இணைய தள அணியோ, சமூக  வலைதள அணியோ இல்லை. இன்றைய சூழலில் முகநூல், ட்விட்டர் என்று எங்கு பார்த்தாலும் திமுகவினரின் ஆதிக்கமே அதிகம் காணப்படுகிறது. ஆனாலும், அதற்க்கு என எந்த வித அமைப்பும் கிடையாது, அதிகார மையங்களும் கிடையாது.



ஆனாலும், காலத்தின் கட்டாயம் திமுகவையும் இத்தகைய ஒரு அமைப்பை அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி இருக்கிறது. முதல்வர் ஜெ. அவர்களின் உடல்நிலை குறித்து சமூகவளைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 8 பேரை கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை, மேலும், இந்த விசயத்தில் திமுவினரின் சமூக வலைதள கணக்குகளை குறிவைத்து முடக்கும் காவல் துரையின் நடவடிக்கையே இத்தகைய அமைப்பின் அவசியத்தை திமுகவினரிடையே யோசிக்க வைத்து இருக்கிறது. மேலும், திமுகவிற்கு ஆதரவாக பதிவிடும் பதிவாளர்களின் சட்ட ரீதியான பாதுகாப்புக்கு இத்தகைய அணி அவசியம் என்ற கருத்தும் மெல்ல தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது.

இருந்தாலும், எந்த ஒரு அதிகார மையமும் இல்லாமல், முறையான பயிற்சி கூட இல்லாமல் சிறப்பாக செயல்படும் திமுக இணையதள தொண்டர்களில் பலரும் இத்தகைய ஒரு அமைப்பை, அதிகார மையங்களை விரும்ப வில்லை.  மேலும், இத்தகைய அதிகார மையம் தங்களின் கருத்தை எழுதுவதில் கடிவாளம் போட்டுவிடும் என்ற கருத்தும் மேலோங்கி இருக்கிறது.



பொதுவாக சமூக வலைதளங்களில் திமுகவிற்கு ஆதரவாக பதிவிடும் பதிவாளர்களில் 100-க்கு 30% பேர் மட்டுமே திமுக கட்சியை சேர்ந்தவராக இருப்பார்கள். மீதம் இருக்கும் 70% பேர் திமுக அனுதாபிகள் தான், இவர்களை எந்த ஒரு அதிகார மையம் கொண்டும் கட்டு படுத்த நினைத்தால் நிச்சயம் அது திமுகவிற்கு தான் பாதகமாக அமையும்.  மேலும், இவர்களின் தனிப்பட்ட திமுக பற்றில், இவர்களின் தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தில் அதிகார மையத்தின் தலையீடு எந்த வகையிலும் அவர்களை கட்டுபடுத்தாது.



கடந்த 1 வார காலமாக முகநூல், மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் திமுக இணையதள அணி வேண்டுமா? வேண்டாமா என்ற கருத்து மோதல் மேலோங்கி இருக்கிறது.  சில இடங்களில் அது நேரடி மோதலாகவே காணபடுகிறது.  இது தற்பொழுது பெரும் சலசலப்பை திமுக ஆதரவு பதிவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருப்பது மறுக்க முடியாத உண்மை.

எது, எப்படியோ இன்றைய சூழலில் திமுக ஆதரவு பதிவாளர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை அளிக்க வேண்டியது திமுக தலைமையின் கடமை.  அதை, ஒரு அதிகார மையம் அமைத்து  தான் செயல்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது.  சட்ட துறை வல்லுனர்களின் குழுவை மாவட்டம் தோறும் அமைத்தாலே போதும்.  இவர்களின் ஆதரவும், இவர்களை தொடர்பு கொள்ளும் முறையும் எளிமை படுத்தினாலே போது, இப்போ இருக்கும் திமுக இணைய அணியின் செயல்பாடு இப்போ இருப்பதை விட மேலும் பல மடங்கில் தீவிரமாக செயல்படும் என்பது பெரும்பாலான திமுக பதிவாளர்களின் கருத்து.

Comments