மீண்டும் விசாரித்ததில் ஒரே ஒரு படகு மட்டும் மேலோட்டமாக வந்து பெயரளவுக்கு ஒரு சிலரை மட்டும் ஏற்றிச் சென்றதாகவும், அது தொடர்ச்சியாக வந்து மக்களை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வில்லை என்று நண்பர் தொலைபேசியில் தெரிவித்தார்.
மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தேன். காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம்பரம் தீயணைப்பு நிலைய தொலைபேசி எண் வாங்கினேன். ஆனால் அவர்கள் கொடுத்த எண் வேலை செய்யவில்லை. மீண்டும் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகள் யாருக்காவது தகவல் தெரிவியுங்கள். நீங்கள் கொடுத்த தொலைபேசி எண் வேலை செய்யவில்லை என்று கூறினேன். அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் பதில் அளித்தனர்.
இதுபோல் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் குறித்த தகவல் தங்களுக்கு தொடர்ச்சியாக வருவதாகவும், அது தொடர்பான தகவலை அந்தந்த பகுதிக்கு தெரிவித்துவிடுவதாகவும் கூறினர். மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் முதல் மாடியில் இருந்தால் அங்கேயே இருப்பதுதான் நல்லது. படகுகள் மூலம் வெளிவர முயற்சிக்க வேண்டாம். வெளியில் வந்தால் முகாமில் அவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் வசதி இல்லை என்றனர்.
மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அப்போது ஒரு செல்போன் எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறு கூறினர். ஆனால் செல்போன் சேவைகள் முடங்கி இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. காவல் நிலையத்தில் கூறி வயர் மூலம் அங்கு படகு ஓட்டுபவர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
பலர் மாடியில் ஏறி கோல்களில் சிவப்பு துணி கட்டி தங்களை காப்பாற்ற வருமாறு கத்தியபடி இருந்துள்ளனர். சிலர் 20 லிட்டர் வாட்டர் கேன்களுடன் குதித்து வெள்ளத்தில் தப்ப முயன்றனர். ஆனால் அவர்களால் நினைத்தபடி நீந்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் கரைகளை பிடித்துக் கொண்டு மீண்டும் வந்துவிட்டனர்.
நான் கூறிய பொறியாளர் மனைவி குழந்தையுடன் சிக்கி இருந்தார். மனைவியின் தங்கை நேரில் வந்து படகு ஓட்டுபவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அவர்கள் அப்பகுதியில் படகை செலுத்த முடியாது என்று கூறியுள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் சிலர் ரூ.2000 கொடுத்தால்தான் வருவார்கள். நாங்கள் கொடுத்துவிட்டு காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இவரும் கொடுக்க முயன்றுள்ளார். அதற்குள் அவர்களிடம் பலரிடம் பணம் வாங்கிவிட்டனர்.
முதலில் இவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது தெரியாது. கடைசியில் இவர்கள் பணம் கொடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் அப்பகுதியில் படகை செலுத்த முடியாது என்று கூறிவிட்டனர். கடைசியில் 4-ம் தேதி காலை வெள்ளம் வற்றிய பிறகு அப் பகுதியில் இருந்தவர்கள் வெளியேறினர். பொறியாளர் என்னிடம் இதை சொன்னபோது அவரது கண்கள் கலங்கியிருந்தன.
பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர்(காஞ்சிபுரம்)
Comments