கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருளான பால் கிடைக்காமல் மக்கள் தத்தளித்து வருகின்றனர். பச்சிளம் குழந்தைகள் பலரும் பசியால் துடிக்க மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. ஆவின் நிர்வாகம் அறிவிக்கப்பட்ட போன் நம்பர்கள் செயல்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பெய்த வரலாறுகாணாத கனமழை பொதுமக்கள் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் சிரமத்தை உருவாக்கி விட்டது. பல கோடி மதிப்பிலான வீட்டில் வாழ்பவர்களும், சாதாரண குடியிருப்புகளில் வாழ்ப்பவர்களும் ஒரே பிரச்னையை தான் சந்தித்து வருகின்றனர். மின் இணைப்பு துண்டிப்பு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான கோட்டூர்புரம், அடையாறு, திருவான்மியூர், ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, கொளத்தூர், சைதாப்பேட்டை, தி.நகர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் தொடர்ச்சியாக கடந்த 5 வது நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். அதிர்ச்சியில் மக்கள் மழைவிட்டு இயல்பு நிலைக்கு பொதுமக்கள் திரும்ப தொடங்கியுள்ளனர். இன்று காலை முதல் வெயில் அடித்து வரும் சூழ்நிலையில் பலர் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர். ஆனால், அவர்களுக்கு இன்று காலை அதிர்ச்சி காத்திருந்தது. கடும் அவதியில் மக்கள் 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க முடியவில்லை, அதோடு வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் வீட்டு பயன்பாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் பலர் கடும் அவதிக்குள்ளாகியுள்னர். பல கோடி மதிப்பிலான வீடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிர்ச்சியை தந்தது. அடிகுழாயில் தண்ணீர் பணம் கொடுக்க தயாராக இருந்தும் தண்ணீர் கிடைக்க வழியில்லாமல் பலர் திணறினர். இந்த சூழ்நிலையில் தெருமுனைகளில் உள்ள அடிபம்புகளில் மட்டும் குறைவாக தண்ணீர் வந்தது. இதனால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் ஒரு குடம் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் பிடித்து சென்றனர். இதனால் பலரது வீடுகளில் காலையில் பாத்ரூம் கூட செல்ல முடியாமல் பரிதவித்தது உச்சகட்ட அவலத்தை வெளிப்படுத்தியது. தண்ணீர் தட்டுப்பாடு பல இடங்களில் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்தடையால் இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்த பலர் தற்காலிகமாக தங்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளும் மின் தடையால் செயல்படாமலேயே உள்ளன. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கேன் குடிநீர் தட்டுப்பாடு இதனால் அனைத்து இடங்களிலுமே இன்று பெரும்பாலான பொது மக்களின் குடிநீர் தேவையை வாட்டர் கேன்களே பூர்த்தி செய்கின்றன. இதனை பயன்படுத்தி வாட்டர் கேன் விற்பனையாளர்கள் அதன் விலையே பல மடங்கு உயர்த்தி விட்டனர். தாகத்தில் தவிக்கும் பொது மக்கள் கடுமையான மன உளைச்சலுடனேயே வேறு வழியின்றி, அதிக விலை கொடுத்து குடிநீரை வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். வெடிக்கும் போராட்டம் மழை வெள்ளத்தால் வீட்டிற்குள் முடங்கி கிடந்த மக்கள் பலரும் வெள்ளம் வடிந்த உடன் இப்போது வீட்டை விட்டு வரத் தொடங்கியுள்ளனர். பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத காரணத்தால் மக்களின் கோபம் அரசு மீது திரும்பியுள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடிநீர் கேட்டும், நிவாரணம் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்ச்சல் பரவுகிறது வெள்ளநீரில் நடந்து நடந்து காலில் சேற்றுப் புண் வந்து விட்டதாக கூறிய மக்கள், காய்ச்சலில் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு கவுன்சிலர் கூட வந்து பார்க்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுமக்களின் மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பேசின் பிரிட்ஜ் மறியல் கனமழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, உணவு. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்துதரக் கோரி, சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது. வடியாத வெள்ளம் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் பத்து அடிக்கு மேல் பாய்ந்த வெள்ளம் இப்போது இரண்டு அடியாக குறைந்துள்ளது. முழங்கால் அளவு வெள்ளநீரில்தான் இன்னமும் மக்கள் தவித்து வருகின்றனர். அரசு அதிகாரிகளோ, அரசு சார்பிலோ இதுவரை எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை என்று கூறும் மக்கள் தனியார் நிறுவனங்களும், தன்னார்வ தொண்டர்கள் பலரும்தான், உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கியதாக கூறியுள்ளனர்.
Comments