கதவுக்கு கயிறு கட்டி ஓடும் சொகுசு பஸ்!

தினமலர் செய்தி : 'தமிழகத்தில் அரசு பஸ்கள் பராமரிப்பு, சரியாக இல்லை' என்பதற்கு, மீண்டும் ஒரு உதாரணம் கிடைத்துள்ளது. தாழ்ப்பாள் இல்லாத கதவை, கயிற்றால் கட்டி, நடத்துனர் பிடித்த படி, இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 22 ஆயிரம் அரசு பஸ்கள் உள்ளன. அவற்றில், 10 ஆயிரம் பஸ்கள் ஆயுட்காலம் முடிந்தவை. போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படும் இந்த பஸ்கள், ஆங்காங்கே, 'பிரேக் டவுண்' ஆகி நின்று விடுவது வாடிக்கை. 5,000 புதிய பஸ்கள் தரப்பட்டும், நிலைமை சீராகவில்லை.

மோசமான பஸ்களின் நிலைமைக்கு சாட்சியாக, சென்னையில் இருந்து மயிலாடுதுறை செல்லும், கும்பகோணம் போக்குவரத்து கழக பஸ்சின் - பதிவு எண்:டி.என்.68 என்.0334 - கதவில் தாழ்ப்பாள் இல்லாததால், மூட முடியவில்லை. இதனால், மாட்டு வண்டி ஓட்டுவது போல, பஸ் கதவில் கயிற்றை கட்டி, அதை நடத்துனர் பிடித்துக் கொள்ள,பஸ்சை இயக்க வேண்டி உள்ளது.இந்த பஸ் குறித்த படங்கள், 'வாட்ஸ் ஆப்' எனப்படும், மொபைல் போன் தகவல் தொடர்பு அப்ளிகேஷனில் வேகமாக பரவி வருகின்றன.இதே போல், சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் தமிழகத்தின் பல நகரங்களில், மோசமான கதவுடன், சொகுசு பஸ்கள் பல இயக்கப்படுகின்றன.

Comments