மழையால் சரிந்த மது விற்பனை: 'டாஸ்மாக்' நிர்வாகம் கவலை

தினமலர் செய்தி : சபரிமலை சீசன்' காரணமாக, மது விற்பனை, 25 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது; தொடர் மழையால், மேலும் சரியும் என, 'டாஸ்மாக்' நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் கடைகளில், தினமும், சராசரியாக, 70 கோடி ரூபாய்; ஞாயிற்றுக் கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 95 கோடி ரூபாய்; தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், மது விற்பனை, 100 கோடி ரூபாயை தாண்டும். சபரிமலை சீசன், நவ., 17ம் தேதி துவங்கியதை அடுத்து, மது விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த, 14 நாட்களில், மது விற்பனையில், 25 சதவீதம் சரிவு ஏற்பட்டுஉள்ளது. மது விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவால், இந்த இரு வாரத்தில் மட்டும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு, 225 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், தீபாவளியை ஒட்டி கொட்டித் தீர்த்த மழையால், பீர் விற்பனை, 25 சதவீதம் குறைந்து, 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

மழை தொடர்வதால், அன்றாட தொழில்களுக்கு பாதிப்புக்கு ஏற்பட்டு, மது விற்பனையும் சரிந்து வருகிறது. எனவே, மது விற்பனையில், நடப்பாண்டின் இலக்கை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். மதுவிற்பனை சரிந்துள்ளது, சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments