மூழ்கிய சென்னை: மீட்புப் பணிக்கு திராணியில்லை... அமைச்சர்களுக்கு பொத்துகிட்டு வரும் கோபத்தை பாருங்க (வீடியோ இணைப்பு...)
அனைத்து பகுதியிலும் ஆளை மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ள நீர் உயர்ந்து கிடக்கிறது... இதில் சிக்கிய லட்சக்கணக்கான மக்களை மீட்பதற்கு துளியும் அசைவற்று தமிழக அரசு நிர்வாகம் முடங்கிப் போய்கிடந்த பேரவலத்தை நாடு நேற்று கண்டது... குறிப்பாக தென்சென்னையின் கோட்டூர்புரம் பாலம் மூழ்கி அதை ஒட்டிய குடியிருப்புகளில் முதல் மாடியை மீறி வெள்ளம் செல்கிறது..உயிரை கையில்பிடித்த படி மொட்டைமாடிகளில் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்...
இந்த கதறல் காட்சியை பார்க்க வந்த அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வளர்மதி மற்றும் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் நேற்று மாலை அப்பகுதிக்கு வந்தனர். வெள்ளத்தை எட்டி எட்டி பார்த்தார்களே தவிர மொட்டை மாடியில் அபயக் குரல் எழுப்பியவர்களை மீட்பதற்கு ஒரு படகை கூட கொண்டுவர திராணியற்றவர்களாகத்தான் இருந்தார்கள்..
அப்போது அங்கு சென்ற நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் லைவ் ஒளிபரப்பிலேயே மேயர் சைதை துரைசாமியை கருத்து சொல்ல அழைத்தார். ஆனால் அவரோ எஸ்கேப்பாகி அமைச்சர் வைத்தியலிங்கத்தை கூப்பிட்டு பேச சொன்னார்..
அந்த நிருபரும் மொட்டைமாடியில் அபயக் குரல் எழுப்புகிறவர்களை கைகாட்டி... இப்படி இந்த பகுதியில் மட்டும் 10,000க்கும் அதிகமானோர் தத்தளிக்கிறார்களே.. இதுவரை அவர்களை மீட்கவில்லையே.. என்னதான் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என வைத்தியலிங்கத்திடம் காட்டமாக கேட்க.... அமைச்சர் வைத்தியலிங்கத்துக்கு அப்படி ஒரு கோபம்... அத்தனை கோபத்துடன் படகுகளை ஏற்பாடு செய்திருக்கிறோம்... அதை இங்கே கொண்டுவர முடியவில்லை. ஹெலிகாப்டருக்கும் சொல்லி இருக்கோம் என பதில் கூறிக் கொண்டிருந்தார்... அந்த செய்தியாளர் விடாமல் மீண்டும் கேள்வி எழுப்ப.. அத்தனை கடுப்பிலும் மழையிலும் பதில் சொல்வதற்கு முன், டாக்டர் புரட்சித் தலைவி மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் ஆணைப்படி என்று அம்மா புராணம் பாடத்தான் அவரால் முடிந்தது...
இன்னொரு அமைச்சரான வளர்மதியோ, டிவி மைக்கை தட்டுவிட்டு ரோட்டில் ஓட முயற்சிக்கிறார்... ஒரு கையாலாகத்தன அரசின் அமைச்சரால் இப்படித்தான் நடந்து கொள்ள முடியும்...
கோட்டூர்புரம் ஒன்றும் மீனவர் பகுதிகளில் இருந்து வெகுதொலைவில் இல்லை.. கூப்பிடுதூரத்தில்தான் பட்டினப்பாக்கமும், திருவான்மியூரும் இருக்கிறது...அங்கிருந்து அரசு நினைத்திருந்தால் நேற்று காலையிலேயே படகுகளை இறக்கி மக்களை மீட்டிருக்க முடியும்.. இத்தனைக்கும் கடற்கரை காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலையில் நேற்று காலையில் அப்படியெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடவில்லை.. திருவான்மியூரில் இருந்து அடையாறு, கோட்டூர்புரத்துக்கும் வெள்ளம் அப்படி ஒன்றும் இல்லை.. அரசு நினைத்திருந்தால் கோட்டூபுரத்தில் சிக்கியிருந்த பல்லாயிரம் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி இருக்க முடியும்.. அவ்வளவு மெத்தனப் போக்கு... ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் போவதாக வேறு வாய்சவடால்.... பிறகு எப்படி அங்கே படகுகள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதாம்? அந்த படகுகள் எப்படி அவ்வளவு பெரிய வெள்ளத்துக்குள் கொண்டுவரப்பட்டதாம்?
இத்தனைக்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,500, 7,500 என படிப்படியாக உயர்த்தி 20,000, 29,000 கனடிநீர் திறந்துவிடப்படும் என அறிவிப்பு வெளியிட்டுதான் உபர்நீர் திறந்துவிடப்பட்டது.. இந்த அறிவிப்பை உடனே மக்களுக்கு தெரியப்படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல தமிழக அரசை எது தடுத்தது என தெரியவில்லை. மக்களுக்கான அரசு செயல்படக் கூடியாதாக இருக்க வேண்டும்... இல்லையெனில் மக்கள் தங்களுக்கான அரசை தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு இப்போது உரைக்காமல் இருக்கலாம்.. ஆனால் உரைக்கும் போதுதான் மரண 'வலி' தெரியும்! இதுபோல எத்தனை வெள்ளம் வந்தாலும் சமாளிப்போம் என்று கடந்த வாரம் வாய் கிழிய பேசிய அமைச்சர் வளர்மதிக்கு ஒரு நிருபரின் கேள்விக்குக் கூட பதில் சொல்ல முடியாதோ?. பதில் இருந்தால் தானே சொல்வார்..
Comments