சாலைகளில் பாதாள பள்ளங்கள்: சென்னை வாகன ஓட்டிகள் பீதி; அதிகாரிகள் குழப்பம்

தினமலர் செய்தி : சென்னையின் பல பிரதான சாலைகளில், திடீரென ஏற்பட்ட பாதாள பள்ளங்களால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பீதி அடைந்துள்ளனர். இதற்கான உரிய காரணம் தெரியாமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சென்னையில் இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட மிக அதிகமாக கொட்டி தீர்த்தது. வெள்ள பாதிப்பில் இருந்து முழுமையாக மீள்வதற்குள், சாலைகளில் ஏற்பட்ட திடீர் பள்ளங்கள், மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளன.குறிப்பாக, நகரில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள கீழ்கண்ட பகுதிகளில் பள்ளங்கள் உருவாகியுள்ளன.

* மயிலாப்பூர், பி.எஸ்.சிவசாமி சாலை
* கபாலீசுவரர் கோவில் குளம் எதிரில்

* மந்தைவெளி, தேவநாதன் சாலை

* டி.டி.கே.சாலை - அம்புஜம்பாள் தெரு சந்திப்பு

* வள்ளுவர் கோட்டம், லேக் ஏரியா, 1வது பிரதான சாலை

* வேளச்சேரி, தரமணி சாலை

*வளசரவாக்கம், சின்ன போரூர், அண்ணா சாலைஎன, பள்ளம் ஏற்பட்ட சாலைகளின் பட்டியல் நீள்கிறது.

சென்னை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளான மாதவரம் மண்டலத்தில், மாநகராட்சி, குடிநீர் வாரியம் இடையே ஒருங்கிணைப்பு இன்றி, சாலைகள், பாதாள சாக்கடை பணிகள் நடந்ததால், பல இடங்களில் புதை குழிகள் ஏற்பட்டுள்ளன.'ஹாலிவுட்' படங்களில் வருவது போல, சாதாரணமாக உள்ள சாலையில் திடீரென பெரிய பள்ளங்கள் ஏற்படுவது குறித்த காரணம் புரியாமல் அதிகாரிகளும், அச்சத்தில் பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'எதிர்பாராத வகையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருவதால், பாதுகாப்பு பணிக்கு போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நிலைமைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்' என்றார்.

மழையே காரணம்:

மாநகராட்சி;சென்னை மாநகராட்சி சாலைகள் துறை தலைமை பொறியாளர் புகழேந்தி கூறியதாவது: திடீர் பாதாள பள்ளங்களால், மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்கள் ஏற்படுவது சகஜம் தான்; இதற்கு, புவியியல் காரணங்கள் எதுவும் இல்லை. குடிநீர் குழாய், கழிவுநீர் குழாய் பதிப்பது, மெட்ரோ ரயில் பணி என, சாலையில் பள்ளம் தோண்டி பணிகள் செய்யப்பட்ட பின், மாநகராட்சியால் அந்த சாலை சீரமைக்கப்படுகிறது.இதில் எல்லா இடங்களிலும், மண்ணுக்கு, 100 சதவீதம் அழுத்தம் கிடைக்காது. சில இடங்களில், 'லுாஸ் சாயில்' ஆக, மண்ணில் அழுத்தம் குறைவாக இருக்கும். அவ்வாறு உள்ள இடம், மழை அதிகமாக பெய்வதால், மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து, அதிகளவு மண்ணை திடீரென உள்வாங்கும்; இது இயற்கையாக நடப்பது தான்.
குடிநீர் வாரியம் சொல்வது என்ன?

சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மழைக் காலங்களில் திடீர் பள்ளம் ஏற்பட, பல காரணங்கள் உள்ளன. பல துறைகளால், தரையில் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் போது, சில சமயங்களில் சேதம் ஏற்படுகிறது. பெருமழை பெய்யும் நேரங்களில், மண் அடுக்கில் ஏற்படும் வெற்றிடங்களால் இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு பின், தற்போது பெய்த பெரும் மழை, அதிக அளவு நீர்த்தேக்கம் மற்றும் மண் அரிப்பு காரணமாக இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. குடிநீர், கழிவுநீர் குழாய்கள் பதிப்பு தான் இதற்கு காரணம் என கூற முடியாது. மயிலாப்பூர், சிவசாமி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை, நிரந்தரமாக சரி செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. மற்ற இடங்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை, நெடுஞ்சாலை, மாநகராட்சி உள்ளிட்ட பிற துறைகளுடன் இணைந்து சீரமைப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

வல்லுனர் கூறுவது என்ன?

இது குறித்து, கட்டட அமைப்பியல் வல்லுனர் பாலமுருகன் கூறியதாவது:
* சென்னையில் பெரும்பாலான பகுதிகள், 40 ஆண்டுகளில், 8 அடி வரை மண் கொட்டி மேம்படுத்தப்பட்டவை. இவ்வாறு வெளியில் இருந்து கொண்டு வந்து கொட்டப்படும் மண், முறையாக இறுக்கம் அடைய, 30 ஆண்டுகள் ஆகும்

* நில அதிர்வு, அதிக மழை பெய்வது போன்ற சமயங்களில் மண்ணில் ஏற்படும் அழுத்தத்தின் அடிப்படையில் இறுக்கமாகும் நிகழ்வு நடக்கும்

* அதிக மழையால், மண்ணில் ஈரத்தன்மை அதிகரிக்கும் போது இறுக்கம் குறைவான பகுதியில் மண் உள்வாங்கும். இது, இயல்பான நிகழ்வு என்றாலும் அந்த இடத்தின் பயன்பாட்டை பொறுத்து பாதிப்பின் தாக்கம் இருக்கும்

* சாலைகளில் மட்டுமல்லாது கட்டடங்கள் இருக்கும் பகுதியிலும் இது போன்று மண் இறங்கும் நிகழ்வு நடக்கும். அது கட்டடத்தின் முக்கியமான பகுதியாக இருந்தால் பாதிப்பு தெரியும்; உட்புற பகுதியாக இருந்தால் பாதிப்பு தெரியாது

* பெரிய கட்டுமான திட்டங்களுக்கு பாறை மட்டத்திலும், சாதாரண கட்டடங்களுக்கு உறுதியான மண் இருக்கும் தளத்தில் இருந்தும் அஸ்திவாரம் அமைத்தால், கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை விளக்கம்:
சென்னை பல்கலை புவியியல் துறை தலைவர் பேராசிரியர் ஆர்.ஜெகநாதன் கூறியதாவது: தற்காலத்தில், கட்டமைப்பு உருவாக்கத்தில் அறிவியல் ரீதியான ஆய்வுகள் மிக குறைவாகவே உள்ளன. ஒவ்வொரு இடத்திலும் தரையின் மீதான எடையும் அதிகரிக்கிறது. இதனால், மிகவும் குழைவாக, சற்று வெற்றிடத்துடன் உள்ள தரைக்கு கீழ் உள்ள பகுதிகள், எடையை தாங்க முடியாமல் உள் வாங்கும். இது, புவி அமைப்பியலில் நடக்கும் நிகழ்வு தான். நீர் நிலைகளோ, இயற்கையான பள்ளங்களோ நகரப் பகுதியாக மாற்றியிருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும். முக்கிய சாலைகளில் அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால், புவியியல் வல்லுனர்களுடன் இணைந்து அதை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளம் விழும் பகுதிகளில், 'மேப்பிங்' தொழில்நுட்பம் மூலம் சில மீட்டர் ஆழத்துக்கு நிலத்தின் தன்மையை ஆராய வேண்டும். அந்த இடத்தின், 20 முதல், 50 ஆண்டு கால அமைப்பு முறை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அருகில் உள்ள கட்டுமான விவரங்களை சேகரிக்க வேண்டும். அதன் பின் கிடைக்கும் முடிவுகளுக்கு ஏற்ப, அந்த இடங்களில் முன்னெச்சரிக்கை அல்லது தீர்வு நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments