எதற்கு இத்தனை வழக்குகள்? தமிழக அரசுக்கு கண்டனம்

தினமலர் செய்தி : புதுடில்லி: அவதுாறு வழக்குகளில் பெரும்பாலானவை தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதுாறு வழக்குகளின் விசாரணையை நிறுத்தி வைக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த கிரிமினல் அவதுாறு வழக்கை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்; 

அம்மனு விபரம்:விஜயகாந்த் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக, தமிழக அரசு 100க்கும் மேற்பட்ட அவதுாறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதுபோல தொடரப்பட்ட முந்தைய வழக்குகளை சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது.

ஜெயலலிதா உட்பட எந்த பெண்ணுக்கு எதிராகவும், விஜய காந்த் தன் வாழ்நாளில் அவதுாறாக பேசியதில்லை. இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அரசின் தவறுகளையும், ஊழல்களையும் விமர்சிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு.கிரிமினல் நடைமுறை சட்டப்பிரிவு 199க்கு மாறாக, விஜயகாந்துக்கு எதிராக முதல்வர் சார்பில் கிரிமினல் அவதுாறு வழக்கு தொடர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. விஜயகாந்த் பேசியதன் உண்மைப் பொருள் அறியாமல் இத்தகைய வழக்கு தொடரப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி, நவ., 24ல் விஜயகாந்த் ஆஜராகும்படி 'சம்மன்' அனுப்பிஉள்ளார். இவ்வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி.பந்த் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்தின் பேச்சை வாசித்துக் காட்டிய வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி 'அவரின் பேச்சு நியாயமான விமர்சனமே' என்றும் வாதிட்டார். தமிழக அரசு சார்பாக, வழக்கறிஞர் யோகேஷ் கன்னா ஆஜரானார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்: அவதுாறு வழக்குகளில் பெரும்பாலானவை தமிழகத்தில் இருந்தே தாக்கல் செய்யப்படுகின்றன. அவதுாறு பேச்சாக சுட்டிக் காட்டப்பட்டுள்ள விமர்சனங்கள் அரசைப் பற்றி கூறப்படுபவை; தனி நபரைப் பற்றி அல்ல. மேலும் தனி நபருக்காக ஒரு மாநில அரசு ஏன் வழக்கு தொடர வேண்டும்? அவதுாறு வழக்கு என்பது இதுபோன்ற காரணங்களுக்காக அல்ல. அவதுாறு வழக்கு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உத்தரவிடுகிறோம். இதை எதிர்த்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments