அடையாறு வெள்ளம் மயிலாப்பூரில் புகுந்தது - மக்கள் அவதி

OneIndia News : சென்னை : அடையாற்றில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் மயிலாப்பூர் பகுதியில் புகுந்துள்ளது. இதனால் மயிலாப்பூர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அடையாறு ஆற்று வெள்ளம் மயிலாப்பூரில் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். விவேகானந்தர் கல்லூரியைச் சுற்றிலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 1984ம் ஆண்டுக்கு பிறகு இப்பொழுது தான் இந்த நிலை என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரலாறு காணாத மழையால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவி்ற்கு சென்னையில் மழை கொட்யது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அடையாறு, சைதாப்பேட்டை, தாம்பரம், முடிச்சூர் என்று நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.அத்தியாவசிய உணவுப் பொருட்களான பால், பிஸ்கெட் கூட கிடைக்காமல் பெரும்பாலான மக்கள் தவித்து வருகின்றனர்.

சென்னையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அம்பத்துார் பால் பண்ணை மூடப்பட்டது. சாலைகள் சேதத்தால் வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பால் சென்னைக்கு வரவில்லை. வியாசர்பாடி, மாதவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் பால் விநியோகம் முற்றிலும் முடங்கியது. மாத பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆவினில் பால் விநியோகிக்கப்படுகிறது.

ஒருலிட்டர் பால் 150க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அட்டை வைத்துள்ளவர்களுக்கு பால் கொடுக்காமல் பிளாக்கில் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல 20லிட்டர் தண்ணீர் கேன் 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட 30000 கனஅடி வெள்ளநீரும், மழை வெள்ளநீரும் சேர்ந்து அடையாறில் பெருக்கெடுத்த காரணத்தால், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கே.கே.நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இன்று காலைவரை மயிலாப்பூரில் மழை பெய்த அடையாளமே இல்லாத அளவிற்கு முக்கிய சாலைகள் சுத்தமாக காணப்பட்டன. இந்த நிலையில் திடீரென அடையாறு ஆற்று வெள்ளம் பக்கிங்காம் கால்வாய் வழியாக மயிலாப்பூரில் புகுந்தது. இதனால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடானது. விவேகானந்தம் கல்லூரி சுற்றிலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 1984ம் ஆண்டுக்கு பிறகு இப்பொழுது தான் இந்த நிலை என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments