OneIndia News : சென்னை: வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் உயிரைவிட்டுக் கொண்டிருக்க பாகுபலி போஸ்டரை காப்பியடித்து போட்டு மலிவான விளம்பரம் தேடிய அதிமுகவினர், நிவாரண பொருட்கள் அனைத்திலும் அம்மா ஸ்டிக்கரை ஒட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மீட்புப்பணிகளில் ராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் இயங்கி வருகின்றனர். பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மக்களை தவிக்க விட்டுள்ள தமிழக அரசு, நிவாரணப்பணிகளை மேற்கொள்வதிலும் சுணக்கம் காட்டியது பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆங்காங்க போராட்டங்கள் வெடித்துள்ளன. அதிமுகவினரை அடித்து விரட்டி வருகின்றனர் மக்கள். நிவாரண பொருட்கள் பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும், உணவு பொருட்களையும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து உணவு பொருட்களை வாங்கி, நாங்கள்தான் விநியோகிப்போம் என்று பல பகுதிகளில் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா படம் இதற்காக பல ஆயிரக்கணக்கான ஸ்டிக்கர்களை தயார் செய்து வைத்துள்ளனர் அதிமுகவினர். தன்னார்வ நிறுவனங்களிடம் இருந்து பிடுங்கப்படும் உணவு பொருட்களில் முதல்வரின் படம் போட்ட 'ஸ்டிக்கர்களை உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது ஒட்டி வழங்குதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.
லாரிகளை நிறுத்தும் அதிமுகவினர் வெளியூரில் இருந்து நிவாரணம் ஏற்றி வரும் வாகனங்களை அ.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தி நிவாரணப் பொருட்கள் மீது, ஆளும் கட்சி சின்னத்தை பதிப்பதும் பின்னர், அவர்களே எடுத்துச் சென்று நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய எடுத்து செல்வதாகவும், பலர் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார்கள்.

மிரட்டல் விடும் அதிமுகவினர் இதேபோல் ஒரு தனியார் நிறுவனத்தினரால் எடுத்து வரப்பட்ட 5 லாரிகளை இவ்வாறு தடுத்த காரணத்தினால் அந்த வாகனங்கள் சேலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன. இதேபோல இஸ்லாமிய இயக்கத்தினரின் வாகனத்திலும் அ.தி.மு.க.வின் கொடியும், ஜெயலலிதாவின் படமும் வலுக்கட்டாயமாக ஒட்டப்பட்டிருக்கிறது. தாமதமாகும் நிவாரணம் இன்னும் சில இடங்களில் 'ஸ்டிக்கர்களை' தயார் செய்ய தாமதமானதால், அந்த உணவு பொருட்களை வழங்காமல் வைத்திருந்து ஸ்டிக்கர்கள் கிடைக்கப்பெற்ற பின் அதனை நிவாரண பொருட்கள் மீது ஒட்டி அரசு சார்பில் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் நிவாரணப் பொருட்கள் கிடைக்கப் பெறாமல், மக்கள் திண்டாடி வருகின்றனர். மே 17 இயக்கம் இதற்கிடையே நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் மே 17 இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களை அ.தி.மு.க.வினர் தொடர்ந்து மிரட்டிவருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நிவாரணம் வழங்குவதில் அ.தி.மு.க.வினர் செய்து வரும் அராஜகத்தினை மே 17 இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது, இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ''அ.தி.மு.க.வினரின் அராஜகத்தினை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் கொதிப்பு...
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொருட்களை, அதிலும் அடுத்தவர்கள் கொடுக்கும் பொருட்களை பெற்று வழங்கி, இதிலும் மலிவான அரசியல் ஆதாயம் தேடும் ஆளும் கட்சியினரை பார்த்து பல இடங்களில் மக்கள் கோபத்தில் குமுற ஆரம்பித்துள்ளனர். அதிமுகவின் பிஸியோ பிஸி...
நிவாரண பொருட்களை வழங்கா விட்டாலும், தன்னார்வ நிறுவனங்களை தடுத்து நிறுத்தி அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவதில் அதிமுகவினர் பிஸியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுகவினர் செய்யும் இந்த செயலினால், ஆளும் அதிமுக அரசுக்கு வரும் தேர்தலில் கடும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிகிறது. ஊடகங்கள் விளாசல்...
இதனிடையே நிவாரணப் பொருட்களை பறித்து ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டி விநியோகம் செய்யப்படுவதை பல ஊடங்கள் விமர்சனம் செய்துள்ளன. உலகப் புகழ் பெற்ற ஹவ்விங்டன் போஸ்ட் வரை ஜெயலலிதாவின் போஸ்டர் அராஜகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Comments