சென்னையில் மீ்ண்டும் கனமழை: கடும் பாதிப்பில் மக்கள்

தினமலர் செய்தி : சென்னை : சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், வேளச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யத் துவங்கியுள்ளது. ஏற்கனவே இன்னலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இம்மழை மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

கனமழை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. சென்னை - விழுப்புரம் தேசிய நெடு்ஞ்சாலை ஒருவழிப் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் அந்த சாலையில் மெதுவாக ஊர்ந்துசெல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் மி்ன்சார ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையின் பலபகுதிகளில் கனமழை பெய்துவருவதால், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக, சென்னை விமானநிலையத்தில், 9 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், மாவட்டத்தில் உள்ள 912 ஏரிகளில் 906 ஏரிகள் நிரம்பியுள்ளதாகவும், அவைகளிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கலெக்டர் கஜலெட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஆலோசனை : தமிழகத்தின் பலபகுதிகளில் பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை, வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா, தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அரசுக்கு கோர்ட் உத்தரவு : தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீ்ண்டும் அதை இயல்புநிலைக்கு கொண்டுவரக் கோரி, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, ராமசுப்பிரமணியன் மற்றும் கிருபாகரன் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக, வரும் 21ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments