கோவா புதிய முதல்வராக பர்சேகர் பதவியேற்பு

தினமலர் செய்தி : பனாஜி: கோவா புதிய முதல்வராக லட்சுமி காந்த் பர்சேகர் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் மிருதுளா சின்கா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பரிகர், மத்திய அமைச்சரவையில் இடம் பெற உள்ளார்.
அவருக்கு பாதுகாப்பு துறை ஒதுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, பரிகர் தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக பனாஜியில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூடியது.

பர்சேகர் தேர்வு:
புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மதியம் 12.30 மணிக்கு கூடியது. இக்கூட்டத்தில், பா.ஜ.,வின் 21 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். மேலிட பார்வையாளர்களாக எடியூரப்பா, ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். முதல்வர் பதவிக்கு பிரான்சிஸ் டிசோசா, லட்சுமிகாந்த் பர்சேகர், ராஜேந்திர அர்லகர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இவர்களில் லட்சுமிகாந்த் பர்சேகர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வராக பதவியேற்பு:

பின்னர் ராஜ்பவனில் இன்று மாலை 4 மணிக்கு நடந்த விழாவில், கோவா புதிய முதல்வராக லட்சுமி காந்த் பர்சேகர் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் மிருதுளா சின்கா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பர்சேகருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

குழப்படி நீங்கியது?: முன்னதாக, கோவாவின் துணை முதல்வரான பிரான்சிஸ் டிசோசா, தான் எந்த ஒரு ஜூனியர் முதல்வருக்கும் கீழ் பணிபுரிய முடியாது என்றும், தன்னை முதல்வராக தேர்வு செய்யாவிட்டால், பதவியை ராஜினாமா செய்வேன் என மிரட்டியிருந்தார். இருப்பினும், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கோவா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த லட்சுமிகாந்த் பர்சேகர் கோவாவின் புதிய முதல்வராக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Comments