நீலகிரியில் கொட்டி தீர்த்த கன மழை -- இரு நாட்களில் 1000 மி.மீ., பதிவு : 'மிஸ்ட் லைட்' வெளிச்சத்தில் இயங்கும் வாகனங்கள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது; கடந்த இரு நாட்களில் மட்டும், 1,000 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா பகுதிகளில் கடந்த சில நாட்களாக, பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 5 நாட்களாக இப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், அவலாஞ்சியில், 114 மி.மீ., கூடலூரில், 98மி.மீ., , தேவாலாவில், 79மி.மீ., அப்பர் பவானி மற்றும் நடுவட்டத்தில், 70 மி.மீ., என, ஒரே நாளில், 541 மி.மீ., மழை பெய்தது.
கடந்த இரு நாளில் மட்டும், 1,000 மி.மீ., மழை பெய்துள்ளது. மழையால், ஊட்டியில் குளிர் வாட்டுகிறது; பகல் நேரங்களில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் 'மிஸ்ட் லைட்' வெளிச்சத்துடன், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்குகின்றன. கன மழையின் காரணமாக, ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம், நேற்று விடுமுறை அறிவித்தது. மழையால், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும், பார்சன்ஸ் வேலி, பைக்காரா, கிளன்மார்கன், அவலாஞ்சி, அப்பர் பவானி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன; அணைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Comments