தனுஷ்கோடியில் சாலை அமைக்க ரூ. 57 கோடி : 50 ஆண்டுக்குப்பின் விமோசனம்

ராமேஸ்வரம் : ஐம்பது ஆண்டுகளுக்கு முன், புயலால் தனுஷ்கோடி நகரம் உருக்குலைந்த சோகத்தின் சுவடுகள் மாறாமல் இருக்கும் அங்கு, மத்திய அரசின் முயற்சியால் சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளன. கடந்த 196 4ல், தனுஷ்கோடி புயலில் ரயில்வே ஸ்டேஷன், கோயில், சர்ச் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாகின; சாலை, தண்டவாளம் சீர்குலைந்தது.
இதற்குப் பின், சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை. கடந்த 2001ல், தனுஷ்கோடியில் சாலை, ரயில் பாதை அமைக்கும் சாத்தியக் கூறுகளை ஆராய, 5 கோடி ரூபாயை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஒதுக்கினார். ஆய்வுகளுக்கு பின், முதற்கட்டமாக சாலை அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருந்தது. பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்றதும், இச்சாலை அமைக்க 57 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, 'டெண்டர்' இறுதி செய்யப்பட்டு, பணிகள் துவங்க உள்ளன.

ரூ.27 கோடி : தற்போது, ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை (12 கி.மீ.,) முகுந்தராயர் சத்திரத்துடன் முடிகிறது. இங்கிருந்து 10 கி.மீ.,தூரத்தில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு சாலையை நீடிக்க, முதல் கட்டமாக 5 கி.மீ., க்கு 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. நேற்று, முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் மணல் பரப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் ஆய்வு செய்து, அடையாளக் கொடியை ஊன்றினர். தனுஷ்கோடி செல்லும் 300 மீட்டர் அகல மணல் பரப்பு போக, இருபுறமும் கடல் சூழ்ந்துள்ளது. எனவே, 12 மீட்டர் அகலத்தில் சாலை உருவாக்கி, அதனுள் 7 மீட்டர் அகலத்தில் தார் சாலை அமைய உள்ளது. மொத்தம் உள்ள 9.5 கி.மீ.,க்கு இருபுறத்திலும் கடல் அலை தடுப்பு பாறாங்கற்கள் வைக்கப்படும்.

50 ஆண்டுக்குப்பின் : ஐம்பது ஆண்டுகளுக்கு பின், தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கப்பட உள்ளதால், 'ராமர் பாலத்தை' அருகில் இருந்து தரிசிக்கவும், நீராடவும் முடியும்; இடிந்த கட்டடங்களையும் பார்க்கலாம் . இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவி பொறியாளர் கண்ணதாசன் கூறுகையில், "முகுந்தராயர் சத்திரம் தனுஷ்கோடிக்கு (5 கி.மீ.,) சாலை அமைக்கும் பணி இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. மீதமுள்ள 4.5 கி.மீ., சாலை அமைக்க, 2 வது கட்டமாக நிதி ஒதுக்கப்படும். மொத்த பணிகளும் சில மாதங்களில் முடியும்,” என்றார்.

Comments