ரூ.400 கோடியில் கொள்ளிடத்தில் கதவணை : கீழணைக்கு கீழே அமைக்கப்படும் டூ 0.6 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும்
சென்னை : ''மழைக் காலங்களில், காவிரியில் செல்லும் வெள்ளநீர், கடலில்
கலக்காமல் தடுக்க, ரூ.400 கோடியில், கொள்ளிடத்தில் கதவணை கட்டப்படும்,''
என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
மழைக்
காலங்களில், காவிரியில் வரும் வெள்ளநீரை திருப்பிவிட, கொள்ளிடம் ஆறு
பிரதான வெள்ளநீர் போக்கியாக செயல்படுகிறது.
இந்த ஆற்றில் கீழணை தவிர, வேறு
பாசன கட்டுமானம் இல்லை. வெள்ளநீர், கீழணைக்கு கீழ்புறம் சென்று, வீணாக
கடலில் கலக்கிறது. இதை தடுக்க, 'இப்பகுதியில், தடுப்பணை கட்ட வேண்டும்'
என்ற கோரிக்கையை, பல்வேறு தரப்பினரும் முன் வைத்துள்ளனர். இதை ஏற்று,
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கடலூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டம், ஆதனூர் -
குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே, கீழணையின் கீழ்புறம், 0.6 டி.எம்.சி.,
கொள்ளளவு கொண்ட தலை மதகுகளுடன், 400 கோடி ரூபாயில், கதவணை கட்டப்படும்.
ஸ்ரீரங்கம், ஆளந்தூர் கொத்தமங்கலம் வாரி, லால்குடி இருதயபுரம் நந்தியாறு,
மேலரசூர் மோனோடை, மனச்சநல்லூர் சிறுமருதூர் பங்குனி வடிகால்,
ஸ்ரீதேவிமங்கலம் உப்பாறு, திருப்பத்தூர் சண்முகநதி ஓடை, மருங்காபுரி
வெள்ளாறு, மணப்பாறை கண்ணூத்து ஓடை, சமுத்திரம் கிராமம் மாமுண்டியாறு,
கருப்பூர் கோரையாறு, கே.பெரியபட்டி உப்பாறு வாரி, பொன்னியாறு, முசிறி
அய்யாறு ஆறு, திருத்தியமலை ஆறு, திண்ணக்கோணம் அய்யாறு ஆறு, துறையூர்
குண்டாறு, திருவெறும்பூர் காட்டாறு என, 17 இடங்களில், 32.30 கோடி ரூபாயில்,
தடுப்பணைகள் கட்டப்படும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தேனி
மாவட்டத்தில் உள்ள வைரவனார் அணைக்கட்டின் மேற்கு புற கால்வாயை, சுத்த கங்கை
ஓடையில் இருந்து கூவலிங்க ஆறு வழியாக, கோட்டக்குடி ஆற்றுடன் இணைக்கும்
திட்டம், 48 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படும். இவ்வாறு, அவர் அறிவித்தார்.
'தினமலர்'
செய்தி எதிரொலி : -கல்லணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீர்,
கொள்ளிடம் ஆற்றின் வழியாகவே, கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியை அடைந்து,
அங்கு இருந்து, சென்னை குடிநீர் திட்டத்திற்கு அனுப்பப்படுகிறது. கொள்ளிடம்
ஆற்றில், கதவணைகள் கட்டினால், 14 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்க
முடியும். 'ஆனால், கொள்ளிடம் ஆறு, கடல் மட்டத்துடன் சம அளவில் இருப்பதால்,
அதில் கதவணைகள் கட்ட சாத்தியமில்லை' என, தமிழக பொதுப்பணித் துறையால்
கூறப்பட்டு வந்தது.
இது, டெல்டா மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள், சமூக
ஆர்வலர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கொள்ளிடம் ஆற்றில்,
கதவணைகள் கட்ட சாத்தியக்கூறுகள் இருப்பது குறித்தும், இதன் மூலம், பல
டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க முடியும் என்பது குறித்தும், 'தினமலர்'
நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தற்போது,
கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் திட்டம், அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீணான நீர் எவ்வளவு?
காவிரி
ஆற்றின், வெள்ள வடிகாலாக கொள்ளிடம் ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த
காலங்களில், கொள்ளிடம் ஆறு மூலம், கடலுக்கு சென்று வீணான நீரின் அளவு
வருமாறு:
ஆண்டு டி.எம்.சி.,
2005 70.96
2006 42.85
2007 64.41
2008 78.15
2009 65.42
கடந்த
ஆண்டு, ஆக., மாதத்தில் மட்டும், கர்நாடகாவில் இருந்து கிடைத்த, 20
டி.எம்.சி., காவிரி நீர், கொள்ளிடம் மூலம் வெளியேற்றப்பட்டு
வீணடிக்கப்பட்டது.
மின்சாரம் தயாரிக்க முடியுமா? : காவிரி
வடிநில கோட்ட நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொள்ளிடத்தில், கதவணை கட்டுவதற்கு, ஆதனூர் கிராமத்தில் சாத்தியக்கூறு
இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக, இரண்டு கட்ட ஆராய்ச்சிகள்
நடத்தப்பட்டன.
தற்போது, இத்திட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நிதி
ஒதுக்கியுள்ளார். இந்த கதவணை மூலம், 0.6 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க
முடியும். வரும் காலங்களில், மின் உற்பத்தி செய்வதற்கு தேவையான ஏற்பாடும்
இதில் செய்யப்படும். நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் உடனுக்குடன் பணிகள்
துவங்கும். இந்த கதவணை மூலம், கடைமடை பகுதிகளில், பாசனம் மேம்படும். நாகை
மற்றும் கடலூர் மாவட்டங்களில், கதவணை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி
நீர்மட்டம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments