மேட்டூர் அணை ஒரே நாளில் 3 அடி உயர்வு: விரைவில் 100 அடியை எட்ட வாய்ப்பு

மேட்டூர்: நீர்வரத்து அதிகரித்ததால், மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில், மூன்று அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணை விரைவில் 100 அடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த பருவமழையால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் திறக்கப்படும் நீர் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இரு நாட்களுக்கு முன், கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட கூடுதல் நீர் தற்போது மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால், நேற்று வினாடிக்கு, 20,260 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு, 37,729 கனஅடியாக அதிகரித்தது.

கூடுதல் நீர்வரத்தால், நேற்று, 84.190 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று, 87 அடியாகவும், 46.260 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு இன்று, 49.284 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி, நீர் இருப்பு 3 டி.எம்.சி., என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்தில் 100 அடி?: கர்நாடகா-கேரளா எல்லை நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால், நேற்று வினாடிக்கு, 30,000 கனஅடியாக இருந்த கபினி உபரி நீர்திறப்பு இன்று வினாடிக்கு, 20,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை நீடிப்பதால், நேற்று, 18,000 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர் திறப்பு இன்று, 21,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணை நீர்மட்டம், 100 அடியை எட்ட இன்னமும், 16 டி.எம்.சி., நீர் தேவை. ஒரு வாரத்தில் நீர்மட்டம், 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது.

நீர் திறப்பு குறைப்பு: கரையோர மக்கள் ஆடிபெருக்கு பண்டிகை கொண்டாட கடந்த, 27ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 6,000 கனஅடி நீர்திறக்கப்பட்டது. ஆடிபெருக்கு பண்டிகை நேற்று முடிந்ததால், கூடுதலாக திறக்கப்பட்ட, 6,000 கனஅடி நீர் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக மட்டும், 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Comments

Unknown said…
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.56 அடியாகவும் நீரின் இருப்பு 80.64 கன அடியாகவும் உள்ளது......
http://tamilnews24x7.blogspot.in/2014/08/3-100.html