பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு சசி தரூர் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது : பெண் பத்திரிகையாளர் மெர் தரார் பேட்டி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு, சசி தரூரின் குடும்பத்தில் நான் குழப்பம் விளைவிக்க முடியாது,'' என, பாக்., பெண் பத்திரிகையாளர் மெர் தரார் கூறியுள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர், 52. இரண்டு நாட்களுக்கு முன், டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மர்மமான முறையில் இறந்தார்.
அமைச்சர் சசி தரூருக்கு இவர், மூன்றாவது மனைவி. சுனந்தாவும், ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர், மெர் தராருக்கும், அமைச்சர் சசி தரூக்கும் தொடர்பு உள்ளதாக, சுனந்தா, "டிவிட்டர்' இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் தரூர், பாகிஸ்தான் பெண்ணுடன் கொண்ட உறவால் தான், சுனந்தா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர், மெர் தரார், 45, இது குறித்து கூறியதாவது: சசி தரூரை, இந்தியாவில் ஒரு முறையும், துபாயில் ஒரு முறையும் சந்தித்துள்ளேன். அவரை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில், சசி தரூரை பாராட்டியிருந்தேன். "இது, சுனந்தா புஷ்கருக்கு பிடிக்கவில்லை' என, சசி தரூர் என்னிடம் கூறினார். என்னிடம் இணையதளத்தின் மூலம் தரூர் தொடர்பு கொள்வதையும் சுனந்தா கண்டித்துள்ளார். மற்றவர்களிடம் பேசுவது போலத்தான், சசி தரூரிடமும் பேசினேன். இதை ஏன் சுனந்தா பிரச்னையாக்கினார் என்பது தெரியவில்லை.ஏற்கனவே, சுனந்தாவுக்கும், சசி தரூருக்கும் இடையே காதல் கசந்து விட்டதாக, செய்திகள் வெளிவந்தன. பாகிஸ்தானில் இருந்து கொண்டு, நான் அவர்களது மண வாழ்க்கையை எப்படி நான் முறிக்க முடியும். ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒரு பிரச்னையை சுனந்தா கிளப்பி கொண்டு தான் இருந்தார்.காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவை அவர் விமர்சித்தார். "எதற்காக, ஒமர், பாகிஸ்தானிய பத்திரிகையாளரிடம் பேச வேண்டும்' என்றார். அதன் பிறகு, "முதலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது; இப்போது பத்திரிகையாளரை அனுப்புகிறது' என, என்னுடன் சண்டைக்கு வந்தார்.

சுனந்தா ஏற்கனவே, நோய் வாய்ப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. அவருக்கு குடல் காசநோய் இருந்துள்ளது. இருப்பினும், அவர் தொடர்ந்து புகை பிடித்துள்ளார். சுனந்தா இறந்த விஷயத்தில், என்னை சம்பந்தப்படுத்துகின்றனர். இவர்களது சதிக்கு நான் ஆளாகி விட்டேன். இவ்வாறு மெர் தரார் கூறினார்.

Comments