
டெல்லி: இளைய தளபதி விஜய் விரும்பினால் அவர் தாராளமாக எங்கள்
கட்சியில் சேரலாம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாக
பேச்சாகக் கிடக்கிறது. இது குறித்து ஊடகங்களிலும் கூட செய்திகள் வெளியானது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை ஒரு முன்னணி
நாளிதழ் அணுகி விஜய் விவகாரம் குறித்து கேட்டுள்ளது.
அதற்கு அக்கட்சியின்
தேசிய செயற்குழு உறுப்பினர் பங்கஜ் குப்தா கூறுகையில், விஜய் மட்டும் அல்ல வேறு எந்த திரை உலக நட்சத்திரங்களும் எங்கள்
கட்சியில் சேர எங்களை இதுவரை அணுகவில்லை. விஜய் மற்றும் வேறு எந்த
நட்சத்திரங்களாக இருந்தாலும் அவர்கள் தாராளமாக எங்கள் கட்சியில் சேரலாம்.
அதற்கு எந்த தடையும் இல்லை. விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தால் அவர் ஒரு சாதாரண உறுப்பினராக
மட்டுமே இருக்க முடியும். அவர் கட்சி நிர்வாகியாக ஆசைப்பட்டால் அவரது
நேர்மை குறித்து விசாரணை நடத்திய பிறகே அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படும்.
நன்னடத்தை உடையவர்கள், குற்றப் பிண்ணனி இல்லாதவர்கள் மற்றும் ஊழல்
செய்யாதவர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே ஆம் ஆத்மி கட்சியில் பொறுப்புகள்
வழங்கப்படும். இந்த 3 விஷயங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஒரு குழு
உள்ளது என்றார் பங்கஜ் குப்தா. விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி
பரபரப்பை ஏற்படுத்துவதும், தான் அரசியலுக்கு வரவில்லை என்று விஜய் பதில்
அளிப்பதும் தொடர்கதையாகிவிட்டது.
Comments