புதுடில்லி : ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும் டில்லியின் சட்டத்துறை
அமைச்சருமான சோம்நாத் பார்தி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆதாரங்களை
திருத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்குமாறு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதால், ஆம் ஆத்மி தலைமையிலான அரசுக்கு
நெருக்கடி முற்றி உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஊழல் வழக்கு ஒன்றில் டில்லி சிபிஐ கோர்ட்டில் சோம்நாத்தும் அவரது கட்சிக்காரரும் போராடி வந்தனர். அவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் ஆதாரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல அவதூறானதும் என தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக சோம்நாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரசும், பா.ஜ.,வும் வலியுறுத்தி உள்ளன. ஆனால் தன் மீதான குற்ச்சாட்டுக்களை சோம்நாத் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
சோம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தவறானது என அரவிந்த் கெஜ்ரிவாலும் மறுத்துள்ளார். அவ்வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆதாரங்களை திருத்தியதாக கூறுகின்றனர் எனவும், சோம்நாத் எந்த ஆதாரங்களையும் திருத்தவில்லை எனவும் கெஜ்ரிவால் கூறி உள்ளார். ஊழலுக்கு எதிராக போராட போவதாக மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதியை காப்பற்ற நினைத்தால் கெஜ்ரிவால், தனது அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஷாகீல் அகமது தெரிவித்துள்ளார். சோம்நாத்திற்கு எதிராக கூறப்படும் இந்த குற்றச்சாட்டு மிகவும் பெரியது; இவர் ஏற்கனவே சட்ட செயலாளராக வரம்பு மீறி நடந்துள்ளார்; தற்போது ஆதாரங்களை திருத்திய குற்றச்சாட்டும் இவர் மீது கூறப்படுகிறது; இது முக்கியமான வழக்கு என பா.ஜ., தலைவர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
Comments