மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசில், ஒன்பது ஆண்டுகளாக, பதவி வகித்ததோடு, அந்த அரசுக்கு,
தி.மு.க., தொடர்ந்து, ஆதரவும் அளித்து வந்தது. ஆனால், இலங்கைத் தமிழர்
பிரச்னையைக் காரணம் காட்டி, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்
கொள்வதாக,
கடந்த ஆண்டு மத்தியில், தி.மு.க., அறிவித்தது. வரும், ஏப்ரலில்,
லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி குறித்து, சமீபத்தில்
நடந்த, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், 'காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுடன்
இனி கூட்டணி இல்லை' என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக,
மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, குலாம்நபி
ஆசாத், நேற்றிரவு, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது சி.ஐ.டி., காலனி
வீட்டில் சந்தித்துப் பேசினார். 35 நிமிடம் நடந்த, இந்தச் சந்திப்பிற்குப்
பின், குலாம்நபி ஆசாத் அளித்த பேட்டி: சென்னைக்கு, நான் வரும்போதெல்லாம்,
கருணாநிதியை சந்திப்பது வழக்கம். ஆறு மாத இடைவெளிக்குப் பின், சென்னை
வந்ததால், அவரை சந்தித்தேன். தேர்தல் பற்றியோ, கூட்டணி பற்றியோ, அவரிடம்
பேசவில்லை. காங்கிரசும், தி.மு.க.,வும், 10 ஆண்டுகளாக, கூட்டணியில் உள்ளன.
நாங்கள் சண்டை போட்டதில்லை. இரு கட்சித் தலைவர்களும், ஒருவருக்கொருவர்,
மரியாதை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு, குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
ஆசாத் சந்திப்பு பற்றி, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரசை,
மீண்டும் தி.மு.க., கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; ஐக்கிய
முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., அங்கம் வகிக்க வேண்டும்; மதசார்பற்ற
கூட்டணிக்கு, தமிழகத்தில், கருணாநிதி தலைமை ஏற்க வேண்டும்; காங்கிரசை
தனிமைப்படுத்தக் கூடாது; தே.மு.தி.க.,வை, கூட்டணியில் சேர்த்தாலும், அந்த
கூட்டணியில், காங்கிரசும் தொடர வேண்டும். அதற்கேற்ற வகையில், தொகுதிகளை
பிரித்து தர வேண்டும் என, ஆசாத் தெரிவித்தார். இதற்கெல்லாம், 'பார்க்கலாம்'
என, ஒரே வார்த்தையில், கருணாநிதி பதில் அளித்து விட்டார். இவ்வாறு,
தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. கருணாநிதி ஆசாத் சந்திப்பின் போது,
தமிழக காங்., முன்னாள் தலைவர், தங்கபாலு மற்றும் தி.மு.க., ராஜ்யசபா
எம்.பி., கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
Comments