என்ன பொறுப்பு தந்தாலும் ஏற்றுக் கொள்ள தயார் : ராகுல் சூசக பேச்சு

புதுடில்லி : கட்சி தலைமை எந்த பொறுப்பை தம்மிடம் அளித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். இந்தி நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
ராகுல் பேட்டி :
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் ஜனவரி 17ம் தேதி நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக கூடும் இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்தி நாளிதழ் ஒன்றிற்கு ராகுல் பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் ராகுல் கூறியதாவது : தனிநபர் ஒருவரை (மோடி) நம்பி நாடு செல்ல முடியாது; காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டின் ஒற்றுமையை காக்க முடியும்; 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும்; மக்களுடனான தொடர்பை அதிகப்படுத்திக் கொண்ட வருகிறோம்; காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்; லோக்சபா தேர்தலுக்கு பின் காங்கிரஸ் தலைமையிலான சிறப்பானதொரு ஆட்சி அமையும்; ஆம் ஆத்மியின் பல கொள்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி குறித்து பேசிய ராகுல், ஆம் ஆத்மியின் செயல்பாட்டு முறை வேறாக உள்ளது; இருப்பினும் டில்லியில் காங்கிரஸ் என்ன செய்ய நினைத்ததோ அதை ஆம் ஆத்மி கட்சி செய்து வருகிறது என ராகுல் கூறி உள்ளார்.


பிரதமர் வேட்பாளர் :

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, தனக்கு 3வது முறையாக பிரதமராக விருப்பம் இல்லை எனவும், பிரதமர் பதவிக்கு ஏற்ற அனைத்து தகுதிகளும் ராகுலுக்கு உள்ளது எனவும் பிரதமர் மன்மோக சிங் கூறி இருந்தார். கட்சியில் சோனியாவிற்கு அடுத்த இருப்பதால் ராகுல் தான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ராகுல் இந்த பேட்டியை அளித்துள்ளார். மேலும், தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா முக்கிய பங்கு வகிப்பார் எனவும், அமிதி மற்றும் ராபெர்லி தொகுதிகளில் மட்டும் அவர் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் ராகுல் தெரிவித்துள்ளார். பிரியங்கா பார்லி., தேர்தலில் போட்டியிட உள்ளதாக நிலவும் தகவல்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல், அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிரியங்கா எனது சகோதரி, தோழி, காங்கிரஸ் தொண்டர்களில் ஒருவர்; அவர் தேர்தலில் எனக்கு உதவியாக இருப்பார்; அதை விடுத்து தேர்தலில் எந்த முக்கிய பங்கும் வகிப்பார் என எனக்கு தோன்றவில்லை என ராகுல் கூறி உள்ளார்.

காங்கிரசின் வெற்றி நிலை குறித்து ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளது ஒரு பக்கம் இருக்கையில், சமீபத்தில் சட்டமன்ற தேர்தலில் ராகுல் பிரசாரம் செய்த மாநிலங்களில் மிக மோசமான நிலையிலேயே காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. டில்லியில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததுடன், அங்கு 3 வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments