பங்களா வீடு எனக்கு வேண்டாம் : அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி : அரசு ஒதுக்கியுள்ள பங்களா வீடு எனக்கு வேணடாம் என்றும், சிறிய வீட்டை ஒதுக்குமாறு தான் அரசை கேட்டுள்ளதாகவும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் தாம் எப்போதும் ஆடம்பரத்தை விரும்புவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆடம்பரம் தேவையில்லை: கெஜ்ரிவால்: நாடு ஊழல் மற்றும் விலைவாசியால் பாதிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் யார் பிரதமர் ஆக வேண்டும் என்பது முக்கியமல்ல.
ராகுல் பிரதமராக வேண்டுமா ? மோடி பிரதமர் ஆக வேண்டுமா என்பது ஒரு விஷயமே இல்லை. காங்கிரசும், பா.ஜ.,வும்தான் பிரதமர் வேட்பாளர் யார் என்று பேசி வருகின்றன. விலைவாசி, ஊழல் குறித்து பேச மறுத்து வருகின்றனர். சமையல் காஸ் விலை உயர்ந்து விட்டதே இதில் இருந்து சாதாரண மனிதன் எப்படி தாங்க முடியும் ? இது குறித்து விவாதிக்க வேண்டியது தானே . எனக்கு எதிரானவர்கள் டில்லி அரசு ஒதுக்கிய ஆடம்பர வீடு குறித்து பேசி என்னை காயப்படுத்தி வருகின்றனர். நான் இந்த பங்களாவுக்கு போக மாட்டேன். சிறிய வீடு ஒதுக்குமாறு அரசிடம் கேட்டுள்ளேன். நான் எப்போதும் எளிமையை விரும்புவன். இந்த சமூகத்திற்கு சேவை செய்யவே வந்துள்ளேன். பலரும் தங்களின் சுய லாபத்திற்குத்தான் அரசியலை பயன்படுத்தியுள்ளனர். நான் அப்படி இருக்க மாட்டேன். இவர்கள் விருபத்தின் அடிப்படையில் நான் எனக்கு எனது அமைச்சர்கள் யாவரும் அரசு பஸ்சில்தான் வருகின்றனர். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.


வீடு மாறிய கெஜ்ரிவால் :

இதுவரை 4 படுக்கை அறைகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வசித்து வந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 5 படுக்கை அறைகளைக் கொண்ட சொகுசு பங்களாவிற்கு தனது வீட்டை மாற்றி உள்ளார். கெஜ்ரிவாலின் புதிய வீடு, முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் பங்களா அளவிற்கு ஆடம்பரமாக இல்லை என்றாலும் தலா 5 படுக்கை அறைகளைக் கொண்ட 2 பிளாட்களைக் கொண்ட வீடாகும். தனது புதிய வீடு குறித்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், இந்த வீட்டில் ஒரு பிளாட்டில் மட்டுமே நாங்கள் வசிக்க உள்ளோம்; மற்றொரு பிளாட் எனது அலுவலகமாக செயல்படும்; நான் அதிகாலையிலும், இரவில் அதிக நேரமும் பணியாற்ற வேண்டி இருப்பதால் இந்த புதிய வீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் தவறேதும் இல்லை என அவர் கூறி உள்ளார்.
அமைச்சர்களுக்கு இனோவா கார் :

பதவியேற்பு விழாவிற்கு வந்தது மட்டுமின்றி, கடந்த சில நாட்களாக சட்டசபைக்கு வருவதற்கு மெட்ரோ ரயில், ஆட்டோ என பொது போக்குவரத்து வாகனங்களையே பயன்படுத்தி வந்த ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள், தற்போது புதிய டொயோட்டா இனோவா காருக்கு மாறி உள்ளனர். சட்டசபையில் காங்கிரஸ் ஆதரவுடன் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, ஆட்சி தொடர்வது உறுதியானவுடன் முதல்வர் கெஜ்ரிவால் தவிர மற்ற 6 அமைச்சர்களுக்கும் புதிய கார் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த மனீஷ் சிசோடியா, விஐபி கலாச்சாரத்தை பயன்படுத்த மாட்டோம் என்று தான் நாங்கள் கூறினோம்; கார்களை பயன்படுத்த மாட்டோம் என நாங்கள் ஏதும் கூறவில்லை; அமைச்சர்களும், அதிகாரிகளும் சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட கார்களை பயன்படுத்துவதையே எதிர்த்தோம்; அரசு கார்களை பயன்படுத்த மாட்டோம் என கூறவில்லை; அமைச்சர்கள் அரசு கார்களை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என தெரிவித்துள்ளார். டில்லி போக்குவரத்து அமைச்சர் பரத்வாஜ் கூறுகையில், எனது காருக்கு பெட்ரோல் கூட நான் போடவில்லை; எனது ஏடிஎம் கார்டை எனது மனைவியிடம் கொடுத்துவிட்டேன்; அதனால் நான் அரசு காரை பயன்படுத்துகிறேன் என கூறி உள்ளார். பெண் அமைச்சரான பிர்லா கூறுகையில், நான் பெண் என்பதால் இரவில் தனியாக செல்ல முடியாது என்பதாலும், அமைச்சர் என்பதாலும் அரசு காரை பயன்படுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
காலம் பதில் சொல்லும்:

நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ஆம் ஆத்மி கட்சி பற்றியும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது : டில்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்துள்ளனர்; அந்த ஜனநாயக முறையை நான் மதிக்கிறேன்; அவர்கள் ஆட்சி அமைத்து ஒரு வாரம் தான் ஆகிறது; இனி அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பல அனுபவங்களை கற்றுத் தரும்; அந்த சவால்கள் நாங்கள் எதிர்கொண்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை அவர்களுக்கு புரிய வைக்கும்; அவர்களின் அனுபவம் எத்தகையது என்பது சவால்களை அவர்கள் எதிர்கொள்வதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்; அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பற்றி பேசுவதில்லை :

தனக்கு மீண்டும் பிரதமராகும் எண்ணமில்லை எனவும், நாட்டின் பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு இருப்பதாவும் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். பிரதமர் இக்கருத்தை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அதற்கு பதில் அளிக்கும் வகையில், அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது ஒரு பிரச்னையா?; சமையல் சிலிண்டருக்கான விலையை ரூ.220 அரசு உயர்த்தி உள்ளது; இந்த விலை ஏற்றத்தை ஏழை மக்கள் எவ்வாறு சமாளிக்க முடியும்?; மக்கள் பிரச்னைகள் பற்றி அரசியல் கட்சிகள் பேசுவதில்லை; அனைவரும் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து நாள் முழுவதும் பேசிக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவாலின் பிரதமர் கனவு :

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் டில்லியில் இன்று நடைபெற உள்ளது. இதில் லோக்சபா தேர்தல் குறித்து ஆலேசிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பல மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி எந்ததெந்த மாநிலங்களில் போட்டியிடும் என நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கோபால் ராவ் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் என யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். வழக்கமான அரசியல்வாதிகள் போல் மாறி வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பிரதமர் கனவு வந்துள்ளது என்பதை யோகேந்திர யாதவ்வின் அறிவிப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

Comments