மூன்றே நாளில் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.3.28 கோடி: பொங்கல் இணையதள முன்பதிவில் அபார வசூல்

பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட மூன்று நாட்களில், இணைய தள முன்பதிவில், 3.28 கோடி ரூபாய், வருவாயை போக்குவரத்துக் கழகங்கள் ஈட்டியுள்ளன.

"பொங்கல் பண்டிகைக்கு, 6,514 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில் பயணிக்க, இணைய தளம் மூலமாக, முன்பதிவு செய்ய வசதியுள்ளது. இது தவிர, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக, கோயம்பேடு பஸ் நிலையத்தில், 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.


கடந்தாண்டு தீபாவளியின் போது, முறையாக திட்டமிடாத காரணத்தால், பஸ்களின் இயக்கத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இதையடுத்து, பொங்கல் பண்டிகைக்காக ஏற்பாடுகள் முறைபடுத்தப்பட்டன. கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில், பஸ்களை நிறுத்த வசதி செய்யப்பட்டது.

முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக மூன்று நடைபாதைகள் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. நெரிசல் மிகுந்த கோயம்பேடு நூறடி சாலையில் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில், போக்குவரத்து போலீசாரின் பணி சிறப்பாக இருந்தது. தீபாவளி தவறுகள் திருத்தப்பட்டு, பொங்கல் பண்டிகைக்கு பஸ் இயக்கம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. புறப்பட வேண்டிய நேரத்தில் இருந்து, 10 நிமிடத்திற்குள் பஸ்கள் புறப்பட்டு செல்வது, ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. அதிகளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்து பயணிகள் சென்றனர்.

இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்தாண்டில் சிறப்பு பஸ்கள் இயக்கம் துவங்கி, முதல் இரண்டு நாட்களில், 42,289 டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு, 1.38 கோடி ரூபாய், வ ருவாய் ஈட்டப்பட்டது. தற்போது, 10 மற்றும், 11 ஆகிய இரண்டு தேதிகளில், 81,087 டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு, 2.31 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது' என்றார்.

Comments