திருப்பூர்: ரூ.1,000 கடன் தொகையை திருப்பிக் கேட்ட நண்பனை பீகாரைச்
சேர்ந்த 3 பேர் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்றனர்.
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தன் ராஜ்(24). அவர்
திருப்பூர் அருகே இருக்கும் கே.செட்டிபாளையத்தில் உள்ள வசந்தம் நகரில் அறை
எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். சந்தன் போன்று பீகாரைச் சேரந்த
விகாஸ் குமார், குட்டு குமார், திலீப் குமார் ஆகிய 3 பேர் வி.என்.பி.
கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.
இவர்கள் அனைவரும் வேலை பார்க்கும் இடத்தில் நண்பர்களாகியுள்ளனர்.
இந்நிலையில் விகாஸ் சந்தனிடம் ரூ.1,000 கடன் வாங்கியிருக்கிறார். கடந்த
10ம் தேதி சந்தன் விகாஸ் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று கொடுத்த கடனை
கேட்டுள்ளார். அப்போது சந்தன் மற்றும் விகாஸுக்கு இடையே வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விகாஸ் தன்னுடன் தங்கியிருந்த 2
பேருடன் சேர்ந்து சந்தனை மரக்கட்டையால் தாக்கினார். பின்னார் அவர்கள் 3
பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
காயமடைந்து கிடந்த சந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு
மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்த சந்தன் கடந்த 18ம் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி உயிர்
இழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குட்டு
குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Comments