இந்திய போர்க்கப்பல் இலங்கை சென்றது ; இலங்கை வீரர்கள் பாரம்பரிய வரவேற்பு

கொழும்பு: இந்தியா, மாலத்தீவு, இலங்கை , ஆகிய 3 நாடுகள் இணைந்து போர் ஒத்திகை பயிற்சிக்கென இந்தியாவின் போர்க்கப்பல்கள் விஸ்வாஸ்ட், ராஜ்கமல் என்ற இரண்டு போர்க்கப்பல்கள் புறப்பட்டு சென்றன. இலங்கையில் கொழும்பு அருகே திரிகோணமலை துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்களுக்கு இலங்கை வீரர்கள் பாரம்பரிய வரவேற்பு அளித்தனர்.


ஐ.சி.ஜி.எஸ்., விஸ்வாஸ்ட் கப்பல் கடலுக்குள் ரோந்து பணியில் இருக்கும். இந்த கப்பலின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வர்கீஸ் தலைமையில் சென்ற இந்த கப்பலில் 102 வீரர்கள், 10 அதிகாரிகள், 2 பயிற்சி அதிகாரிகள் சென்றனர். இந்த கப்பல் 94 மீட்டர் நீளம் கொண்டது. இதன் எடை 2 ஆயிரத்து 400 டன்.

கடற்கரையில் ரோந்து செல்லும் ஐ.சி.ஜி.எஸ்., ராஜ்கமல் கப்பல் கமாண்டர் எச்.ஜே.,சிங் தலைமையில் சென்றது. 356 டன் எடை திறன் கொண்ட இந்த கப்பல் 50. 38 மீட்டர் நீளம் கொண்டது. 42 வீரர்கள் , 5 அதிகாரிகள், 36 மாலுமிகள் ஆகியோர் இந்த கப்பலில் உள்ளனர்.

இலங்கை கேட்டு கொண்டதன் அடிப்படையில் இந்த போர் ஒத்திகை பயிற்சி நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை போர் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க கூடாது, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என தமிழ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு குரல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்திய கப்பல் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளது. இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments