டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில்
குற்றவாளிகள் இருவர் சார்பில் வாதாடி வந்த இரண்டு வழக்கறிஞர்கள் திடீரென
வழக்கிலிருந்து தாமாகவே விலகியுள்ளனர்.
டெல்லியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ
மாணவி ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக
குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சிறை வளாகத்திலேயே குற்றவாளி ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். பின்னர்
மீதமுள்ள 5 குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் அவனுக்கு 3 ஆண்டு
சிறைத்தண்டனை வழங்கி சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து,
மற்ற 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனை பெற்ற 4 பேரில், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகியோர்
ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகளான முகேஷ்
மற்றும் பவன்குமார் குப்தா இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.
இந்நிலையில், முகேஷ் மற்றும் பவன்குமார் குப்தா ஆகியோரின் வழக்கறிஞர்களான
வி.கே.ஆனந்த் மற்றும் விவேக் சர்மா ஆகியோர் அதிரடியாக தாங்கள் இந்த
வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து வி.கே.ஆனந்த்
ஹைகோர்ட்டில் நேற்று ‘தனது பணியில் குற்றவாளியின் குடும்பத்தினரும், சில
வழக்கறிஞர்களும் குறுக்கிடுவதாகவும், எனவே தன்னை இந்த வழக்கில் இருந்து
விடுவிக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். இதனை நீதிபதிகள் ஏற்றனர்.
இதேபோல் பவன் குமாரின் வழக்கறிஞரான விவேக் சர்மா, தொலைபேசி மூலம் தனது
விலகலை கோர்ட்டுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குற்றவாளிகளான முகேஷ் மற்றும் பவன்குமாரின் வழக்கறிஞர்கள் திடீரென
விலகியதையடுத்து, அவர்களுக்காக பாரபட்சமற்ற ஆலோசகரை நியமிக்க வேண்டும் என
நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Comments