அரசு பஸ்களில் ‘அம்மா குடிநீர்’ கிடைப்பது எப்போது?உற்பத்தியில் சிக்கல்

குடிநீர் உற்பத்தி நிலையத்தில், போதிய உற்பத்தி எட்டாததால், அரசு பஸ்களில், ‘அம்மா குடிநீர்' வினியோகத்தை துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம்:

தமிழகத்தில், இம்மாதம், 15ம் தேதி முதல், அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம், 304 இடங்களில், ‘அம்மா குடிநீர்' பாட்டில் விற்பனை துவங்கப்பட்டது. பஸ் நிலையங்கள்,
மோட்டல்கள் மற்றும் தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது.இதற்காக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில், மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் துவக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு, 3 லட்சம் பாட்டில்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்ட போதிலும், போதிய உற்பத்தி இல்லை.திட்டம் துவங்கிய முதல் நாளே, 1 லட்சம் லிட்டருக்கும் குறைவான லிட்டரே உற்பத்தியாகியுள்ளது. தொடர்ந்து, உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இருப்பினும், உற்பத்தி நிலையத்தில் உள்ள, மூன்று யூனிட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இரண்டு யூனிட்களில் போதிய உற்பத்தி இல்லை.


விலை குறைவு:

இதன் காரணமாக, தேவையான அளவிற்கு, 304 ஸ்டால்களுக்கும், குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. ஒவ்வொரு ஸ்டாலுக்கும், 20 முதல் 30 பெட்டி (ஒரு பெட்டியில், 12 பாட்டில்கள்) வரை வினியோகம் செய்யப்படுகின்றன. விலை குறைவால் இவை, இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் விற்று விடுகின்றன.இதனால், மற்ற நேரங்களில் ஸ்டால்களில், குடிநீரின்றி வெறிச்சோடி கிடக்கின்றன. குறிப்பாக, மோட்டல்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால்களில் குடிநீர் தேவை அதிகமுள்ள நிலையில், வினியோகம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
குடிநீர் உற்பத்தி:


நாள் ஒன்றுக்கு, 3 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்திக்கு திட்டமிட்ட நிலையில், 30 முதல் 70 ஆயிரம் லிட்டர் என்கிற அளவிற்கு குடிநீர் உற்பத்தி குறைந்துளளது.எதிர்பார்த்த உற்பத்தியை எட்ட முடியாததால், தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில், திட்டம் துவங்கப்பட்டு ஒன்பது நாட்களாகியும், குடிநீர் வினியோகம் துவங்கவில்லை.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கும்மிடிப்பூண்டி உற்பத்தி நிலையத்தில், பாட்டில்களில் குடிநீர் நிரப்பப்பட்டு மூடிகளை இயந்திரத்தின் மூலமாக மூடும் போது, பெரும்பாலான பாட்டில்களில் மூடிகள் சரிவர மூடாமல், குடிநீர் வெளியாகிறது. மேலும், பாட்டில்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் சரியாக ஒட்டுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதை சரி செய்யும் பணியை அதிகாரிகள் விரைவுப்படுத்தி வருகின்றனர்.போதிய குடிநீர் உற்பத்தியை பெற, மேலும் சில வாரங்கள் ஆகும் எனத் தெரிகிறது. ஆகையால், ஸ்டால்களுக்கு போதிய குடிநீரை வினியோகம் செய்த பின்னரே, பஸ்களில் வினியோகத்தை துவக்குவது குறித்து, சிந்திக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments